சார்க் மாநாடு: நேபாளத்தில் பிரதமர் மோடி! நவாஸ் ஷெரீப், ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை?
டெல்லி: சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 18வது சார்க் மாநாடு நாளை தொடங்குகிறது. 2 நாட்களுக்கு நடைபெறும் இம் மாநாட்டில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, தமது தலைமையிலான அரசு பதவியேற்று, ஆறு மாதங்கள் நிறைவடைவதை, சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக நேபாளம் சென்ற நரேந்திர மோடி, அடுத்த முறை நேபாளம் வரும்போது ஸ்ரீராமரின் மனைவி சீதா பிறந்த இடமான ஜனக்பூர், புத்தர் பிறந்த லும்பினி, முக்திநாத் ஆகிய இடங்களை தரிசிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருவதால், இந்த இடங்களுக்கு பிரதமர் செல்வதற்கான திட்டம் ஒத்திவைக்கப் படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
Another picture from Nepal, where the PM has arrived. pic.twitter.com/1BaoCFzLy5
— PMO India (@PMOIndia) November 25, 2014 மேலும் காத்மண்டுவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரையும் தனிப்பட முறையில் பிரதமர் மோடி சதித்து பேச வாய்ப்பிருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காத்மண்டுவில் நடப்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக நேபாள பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சார்க் உச்சி மாநாட்டில் நான் பங்கேற்பது முதல் முறை. எனது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் வந்து சிறப்பித்தனர். அப்போதே அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து பேச முடிவு செய்தேன்.
அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவதே எனது தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications