மோடி பெயர் பொறித்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம்! குஜராத் வைர வியபாரி வாங்கினார்!!
அமெரிக்க அதிபர் ஒபாமா உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.அதை குஜராத் வைர வியாபாரியும் அவரது மகனும் சேர்ந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மோடி, வயலட்நிற பந்த்கலா கோட் என்ற உயர்ரக கோட், சூட் ஆடை அணிந்திருந்தார்.

அதில் ‘நரேந்திர தாமோதர் தாஸ்' என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதன் விலை ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது. இதை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் விமர்சனம் செய்தனர்.
455 அன்பளிப்புகள்
இந்நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை மற்றும் கடந்த 7 மாதங்களில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 455 அன்பளிப்புகள் சூரத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் கிடைக்கும் தொகை, கங்கை நதி தூய்மைத் திட்டத்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சூரத் நகரில் ஏலம்
அதன்படி, சூரத் நகரில் கடந்த புதன்கிழமை காலை ஏலம் தொடங்கியது. ஏலம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மோடி பதவியேற்ற பின் கடந்த 7 மாதங்களில் அவருக்கு வந்த 455 பரிசுப் பொருட்களும் ஏலத்துக்கு வந்தன.
விறுவிறுப்பான ஏலம்
முதல் நாள் புதன்கிழமை மாலையில் அதிகபட்சமாக குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விரால் சவுக்கி என்பவர், ரூ.1.11 கோடிக்கு அந்த உடையை ஏலம் கேட்டார். நேற்றுமுன்தினம் மாலை ரூ.1.41 கோடிக்கு ஏலத் தொகை உயர்ந்திருந்தது. நேற்று காலை ஏலம் தொடங்கிய பிறகு கோட் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
வைர வியாபாரிகள்
கடைசியில் சூரத்தில் ‘தர்மானந்தா வைர நிறுவனம்' நடத்தி வரும் தொழிலதிபர் லால்ஜி படேல் அவருடைய மகன் ஹிதேஷ் படேல் இருவரும் சேர்ந்து ரூ.4.31 கோடிக்கு அந்த உடையை ஏலம் எடுத்தனர். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர குமார் நேற்று மாலை அறிவித்தார்.
கங்கை தூய்மை திட்டம்
ஏலத்தில் ரூ.4.31 கோடி கொடுத்து கோட் வாங்கிய லால்ஜி படேல் கூறுகையில், ‘‘நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது. அந்த உடையை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். அதன் மூலம் கிடைக் கும் பணம் கங்கை நதியை தூய்மைப்படுத்த செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், எல்லோரும் நல்ல எண்ணத்துடன் ஏலத்தை அதிகரித்து கேட்டனர். ஆனால், மோடி அணிந்த கோட் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை '' என்றார்.
5 கோடிக்கு கேட்டனர்
ஏலத்தின் கடைசி ஒரு மணி நேரம் பெரும் குழப்பம் நிலவியது. பலரும் ஏலத் தொகையை உயர்த்தி மோடியின் உடையை வாங்க மும்முரமாக இருந்தனர். இதுகுறித்து ஆட்சியர் ராஜேந்திர குமார் கூறியபோது, ‘‘ஏலம் முடிந்த பிறகு கூட ரூ.5 கோடிக்கு அந்த உடையை விலைக்கு கேட்டனர். ஆனால், மாலை 5 மணியுடன் ஏலம் முடிந்துவிட்டதால், அதை ஏற்கவில்லை'' என்றார் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரகுமார்.
அழகாக ஆடைகள் அணிவது
தேசபக்தி, இந்தியா, அழகாக ஆடைகள் அணிவது என்ற, மூன்று விஷயங்களை நான் எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்' என, பல ஆண்டுகளுக்கு முன்பே மோடி கூறியுள்ளார்.
அதன் படி, அழகிய வண்ணங்களில் ஆடைகள் அணிவதில், மோடிக்கு விருப்பம் அதிகம். பிரதமராக பொறுப்பேற்கும் முன்னரே, விதவிதமான வண்ணங்களில், வித்தியாசமான ஆடைகளை அணிந்து வந்த மோடி, பிரதமரான பிறகு, அணியும் ஆடைகளில் தனிக்கவனம் செலுத்தத் துவங்கினார். இதுவே விமர்சனத்திற்கு ஆளானது. இதனையடுத்து விலை உயர்ந்த கோட், பரிசுப் பொருட்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.
செல்ஃபிக்கு ரூ.10,000
மோடியின் உருவம் போல உள்ள பொம்மைக்கு கோட் அணிவிக்கப்பட்டிருந்தது. அதன் முன் நின்று, 'செல்பி' படம் எடுக்க, தலா, 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பணத்தை, பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications