3 ஆண்டுகளில் 4,400 மாணவர்கள் ஐ.ஐ.டி, என்.ஐ.டி கல்லூரிகளில் இருந்து "ஓட்டம்"- தப்பியது சென்னை மட்டுமே
டெல்லி: இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டியிலிருந்து 3 ஆண்டுகளில் 4,400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டியிலிருந்து 2060 மாணவர்களும், என்,ஐ.டிலிருந்து 2352 மாணவர்களும் பல்வேறு காரணங்களுக்காக கடந்த 3 ஆண்டுகளில் பாதியிலேயே கல்வியை கைவிட்டுவிட்டதாக மத்திய மனித வளத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் சென்னை ஐஐடியிலிருந்து யாரும் வெளியேறவில்லை. இந்த பாதியில் இடைநிற்றல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசுஉறுதிமொழி அளித்துள்ளது.

இரண்டு கல்வி நிறுவனங்கள்:
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "கடந்த 2012-13 முதல்2014-15 ஆம் கல்வியாண்டு வரை ஐ.ஐ.டிக்களில் இருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டிக்களில் இருந்து 2,352 மாணவர்கள் பாதியில்நிறுத்தியுள்ளனர்" என கூறியுள்ளார்.

புதிய செயல் திட்டம் வடிவமைப்பு:
மேலும் அவர், வேறு கல்லூரி,கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவகாரணங்கள், உயர்நிலை கல்வியின் போது கிடைத்த பணி மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் எனக் கூறியுள்ளார்.

டெல்லி, ரூர்க்கி முதலிடங்களில்:
கடந்த 2014 -15 ஆம் ஆண்டுகளில் ஐ.ஐ.டிக்களில் இருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதில் ரூர்க்கி ஐ.ஐ.டியில் இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டியில் இருந்து 209 பேரும், டெல்லி ஐ.ஐ.டியில் இருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

சென்னையில் கிடையாது:
எனினும், மாண்டி, ஜோத்பூர், கான்பூர், சென்னை ஐ.ஐ.டியில் இருந்து எந்த மாணவரும் படிப்பை பாதியில்நிறுத்தவில்லை. கடந்த 2014-15 இல் 717 மாணவர்களும். 2013-14 இல் 785 மாணவர்களும், 2012-13 இல் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டிக்களும், 30 என்.ஐ.டிக்களும் உள்ளன.

இவைதான் காரணம்:
மாணவர்கள் விலகியதற்கு முக்கிய காரணங்களாக, மற்ற கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாறி செல்வது, தனிப்பட்ட மற்றும் மருத்துவ காரணங்கள் என்று மனிதவளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கல்வியில் சோபிக்க முடியாமை, திறனின்மை, மொழிப் பிரச்சினை, மன அழுத்தம் போன்றவையும் சில முக்கியக் காரணங்கள் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications