மம்முட்டி மருத்துவமனையில், மருத்துவர்கள் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண், குழந்தை சாவு!
பெங்களூர்: மருத்துவமனையின் அலட்சிய மருத்துவ சிகிச்சையால் நிறைமாத கர்ப்பிணியும், அவரின் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்தால்தான், அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையும் என்று அவரின் குடும்பத்தார் போலீஸ் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
வடக்கு பெங்களூரின் எலகங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சேத்தன். இவரது மனைவி அபர்ணா (26). டிரிபிள் கிராஜுவேட் பட்டதாரியான அபர்ணா, தனியார் வங்கியொன்றில், பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அபர்ணா முதல்முறையாக கருவுற்றார். இதனால் குடும்பமே மிக்க மகிழ்ச்சியில் திளைத்தது. வயிற்றை தள்ளிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியுடன் சேர்ந்து ஆசை ஆசையாய் போட்டோக்கள் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மகிழ்ந்தார் சேத்தன்.

தொடர்ந்து மாத்திரைகள்
நிறைமாதமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அபர்ணாவுக்கு இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சககார நகரிலுள்ள மதர்ஹுட் என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி மற்றும் அதிகாலை 2 மணிக்கு தொடர்ச்சியாக வலி வருவதற்கு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சடலம்
காலை 5.30 மணியளவில் பேறுகால வலி அதிகரிக்கவே, ஆபரேசன் தியேட்டருக்கு அபர்ணா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவர் நல்ல உடல்நிலையில்தான் இருந்துள்ளார். ஆனால், காலை 8.30 மணிக்கு அபர்ணாவை சடலமாக வெளியே கொண்டுவந்துள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதுவும் சீரியசான நிலையில் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையும் சாவு
அந்த குழந்தை, ரெயின்போ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தை உயிர்பிழைக்க வாய்ப்பு மிக குறைவு எனவும், அந்த குழந்தை பிழைத்தாலும், உடல் மற்றும் மனநலன் பாதிக்கபடும் என்றும் டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். எனவே கனத்த இதயத்தோடு வென்டிலேட்டரில் இருந்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை உயிரிழந்தது.

சடலத்துக்கு சிகிச்சை?
இந்நிலையில், மருத்துவமனையின் அலட்சியமே இரு உயிர்களை பறித்துவிட்டதாக சேத்தன் மற்றும் அபர்ணா குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். 8.30 மணிக்கு சடலமாக அபர்ணா வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவரது முகம் வெளிரிப்போயிருந்ததாகவும், உடல்மிகவும் குளிர்ச்சியாக இருந்ததாகவும் சேத்தனின் அக்கா தெரிவிக்கிறார். அதாவது, அபர்ணா இறந்த பிறகும், சிகிச்சையளிப்பது போல ரொம்பநேரமாக டாக்டர்கள் சீன் போட்டதால்தான் அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன என்கிறார் அவர்.

ஆத்மா சாந்தி
இதுகுறித்து மதர்ஹுட் மருத்துவமனை சேர்மன் முகமது ரேஹன் சையது கூறுகையில், "நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் அபர்ணா இறந்திருக்கலாம். டாக்டர்கள் சிகிச்சையில் பிரச்சினையில்லை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் மனைவியையும், அவரது மகனையும் இழந்த சேத்தனோ, சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதுதான் அபர்ணா ஆத்மாவுக்கு சாந்தியை கொடுக்கும் என்று கூறுகிறார்.

மம்முட்டி மருத்துவமனை
மருத்துவமனைக்கு எதிராக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர். இந்த மருத்துவமனை மலையாள நடிகர் மம்முட்டிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications