முல்லைப் பெரியாறு அணை தீர்ப்புக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் வரவேற்பு
கோட்டயம்: முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று அளித்த தீர்ப்பை வரவேற்பதாக உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி ஆனந்த் குழுவில் இடம்பெற்றிருந்த கேரள பிரதிநிதியான ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நீதிபதி கே.டி. தாமஸ் கோட்டயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகளும், 7 நீர்பாசன துறை தலைமை பொறியாளர்களும் இந்தியாவில் உள்ள தலைசிறந்த அணை வல்லுனர்களும் சேர்ந்து முல்லை பெரியாறு அணையை பரிசோதித்ததில் அந்த அணை பலமாக இருப்பது தெரிய வந்தது.
அதனால் தான் முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது எனில் மறு ஆய்வு மனுவை கேரளா தாக்கல் செய்யலாம்.
முல்லை பெரியாறு அணை கட்டிய பின்னர் 116 முறை அணை பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் அணையில் ஒரு சிறு கல்லுக்கு கூட எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதுகுறித்த அறிக்கை கேரள அரசுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால் கேரள அரசு ஆய்வுகள் எதுவும் நடத்தாமலேயே சட்டசபையில் அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி நீர் மட்டத்தை 136 அடியாக குறைத்தது.
இதனால் கேரளா-தமிழகம் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தற்போது இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் மூலம் அந்த அணை பலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு இனியும் அணையின் பலம் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை தீர்ப்பதற்காக 3 பேர் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்து உள்ளது. அந்த குழுவிடம் கேரளா தனது கருத்துக்களை தெரிவிக்கலாம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications