நாகபட்டினத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை
தலித் இளைஞர் ஒருவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண், அந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக, சார் பதிவாளர் அலுவலகம் வந்திருந்தபோது, அப்பெண்ணின் தந்தையும் வேறு சிலரும் அடித்து இழுத்துச் சென்ற காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பெண்ணை மீட்ட காவல்துறையினர் அவரை மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர். இதில் என்ன நடந்தது?
நீதிமன்றம் இருந்த வளாகத்துக்குள்ளேயே சட்டத்தை மீறிய பெண்ணின் தந்தை
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு வயது 21. இவரும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பியன் மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பாரதி, மதன்ராஜ் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேற்கொண்டு இவர்கள் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
- கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை
- திமுக பிரமுகர் தூண்டுதலில் ஆணவப் படுகொலையா? இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?
இந்த சூழலில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் உள்ள கோயில் ஒன்றில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டுத் தரப்பில் எதிர்ப்பு நீடித்தது வந்த காரணத்தால் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு கடந்த 10ஆம் தேதி திருச்சியிலிருந்து மதன்ராஜின் சொந்த ஊரான நாகபட்டினம் வந்துள்ளனர்.
பிறகு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) காலை வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகபட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு மதன்ராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆதரவுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பதிவு திருமணத்தின் போது இறுதியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர். நீதிமன்ற வளாகத்தின் வெளியே இழுத்து சென்ற பாரதியை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர்.
அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவரையும் மீறி பாரதியை காரில் ஏற்றினர். இதையடுத்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அருகே இருந்த பொதுமக்கள் அவர்களது காரை மறித்து பெண்ணை காரிலிருந்து இறக்கிவிட வலியுறுத்தினர்.
நீதிமன்ற வளாகம் அருகே வந்த பெண் காவலர் அப்பெண்ணை அவர்களின் பிடியில் இருந்து விடுமாறு கூறும்போது, தாம் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்றும் அது தமது மகள் என்றும் பெண்ணின் தந்தை கூறினார்.
- தலித் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி ஆய்வு
- முடிவெட்ட சென்றதற்காக அடித்த ஆதிக்க சாதியினர்: தற்கொலைக்கு முயன்ற தலித் இளைஞர்கள்
பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்தமேலதிக காவல்துறையினர் பெண்ணை மீட்டு அருகே இருக்கும் போக்சோ நீதிமன்றத்துக்கு பாதுகாப்பிற்காக அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை, மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தி நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் மதன்ராஜ் புகாரளித்தார்.
காவல்துறை பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?
அவர் கொடுத்த புகாரில், "திருமணத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது பாரதியின் பெற்றோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத சுமார் 5 நபர்களுடன் நுழைந்து என்னையும், எனது மனைவி பாரதியை அடித்து கீழே தள்ளவிட்டு, எனது மனைவியை அடித்து கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்," என்று குறிப்பிட்டிருந்தார் .
சம்பவம் குறித்து பிபிசி தமிழுக்கு கூறிய மதன்ராஜ் தரப்பினர், "மதன்ராஜ் கொடுத்த புகாரில் அடிப்படையில், இருவரையும் விசாரித்த காவல்துறையினர், பெண்ணின் விருப்பப்படி கணவருடன் சேர்த்து வைத்தனர். பெற்றோருடன் செல்ல பெண் மறுப்பு தெரிவித்ததால், எங்களுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பெண்ணிடம் அவரது பெற்றோர் எழுதி வாங்கிக்கொண்டனர்." என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவஹரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது விளக்கமளித்த அவர், "அந்த பெண்ணை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் பையனுடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்" என்று கூறினார்.
"பெண் 21 வயது ஆனவர் என்பதால் யாருடன் இருக்க விருப்புகிறாரோ அவருடன் இருக்க உரிமையுள்ளது என்பதால் அந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைத்தோம். பெண்ணின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்துவந்த நிலையில், இனிவரும் நாட்களில் பெற்றோரால் இவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கியுள்ளோம்" என நாகை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதால் கணவர் கொடுத்த புகார் தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று வெளிப்பாளையம் காவல் நிலைய அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
தம்மை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவோ, தாக்கியதாகவோ பாதிக்கப்பட்ட பாரதி புகார் அளித்தால் பெண்ணின் குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அரசு வளாகத்துக்குள்ளேயே இந்த நிகழ்வு நடந்து இருந்தாலும் காவல்துறை தாமாக முன்வந்து இது தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்துக் கேட்டபோது, அப்பெண் புகார் அளிக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் மீண்டும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கண்களைக் குளமாக்கி விடைபெற்றார் விராட் கோலி
- ராம் மனோகர் லோஹியாவுக்கு காந்தி பிறப்பித்த கட்டளை - எதிர்வினை எப்படி இருந்தது?
- இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது?
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications