வாரணாசியில் மோடி போட்டி.. எதிர்த்த ஜோஷிக்கு கான்பூர் - ராஜ்நாத் சிங்குக்கு லக்னோ!
டெல்லி: ஒரு வழியாக நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதியை பாஜக அறிவித்து விட்டது. ஆன்மீக நகரான வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி. அந்தத் தொகுதியை மோடிக்கு வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை சமாதானப்படுத்தியுள்ள பாஜக மேலிடம், அவருக்கு கான்பூர் சீட்டைக் கொடுத்துள்ளது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.பியான லால்ஜி டான்டனின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சீட்டை ராஜ்நாத் சிங்குக்குக் கொடுத்துள்ளது பாஜக.
லக்னோ தொகுதி வாஜ்பாய் முன்பு போட்டியிட்டு வென்ற தொகுதியாகும். அதன் பின்னர் அவரது சிஷ்யரான லால்ஜி டான்டன் போட்டியிட்டு வந்தார். தற்போது அதைப் பறித்துள்ளார் சிங்.

ஜோஷியின் கடும் எதிர்ப்பு
வாரணாசி தொகுதியின் தற்போதைய உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி. இந்த சீட்டை மோடிக்குத் தருவதை அவர் பகிரங்கமாகவே எதிர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பாஜக மேலிடம் அவரை சமாதானப்படுத்தி சீட்டைப் பறித்து மோடிக்குக் கொடுத்து விட்டது.

கடும் கஷ்டமான கான்பூருக்கு ஜோஷி
தற்போது கான்பூர் தொகுதியை ஜோஷிக்குக் கொடுத்துள்ளனர். இங்கு கடந்த 3 தேர்தல்களாைகவே காங்கிரஸ் தலைவர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ஜெயித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸியாபாத்திலிருந்து லக்னோவுக்கு வந்த சிங்
இதேபோல ராஜ்நாத் சிங் கடந்த முறை காஸியாபாத் தொகுதியில் ஜெயித்தார். இந்த தேர்தலுக்கு அவர் லக்னோவுக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

அமிர்தசரஸில் அருண் ஜேட்லி
மூத்த தலைவர் அருண் ஜேட்லி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிடுகிறார்.

சித்துவுக்கு ஆப்பு
வழக்கமாக அமிர்தசரஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துதான் போட்டியிடுவார். ஆனால் அவரை இந்த முறை வேறு தொகுதியில் போட்டியிடுமாறு பாஜக கேட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டாராம்.

போன தேர்தலில் உ.பியில் வெறும் 10 தான்
கடந்த தேர்தலில் மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பியில் வெறும் 10 தொகுதிகளில்தான் பாஜக ஜெயிதத்து என்பது நினைவிருக்கலாம்.

மோடியை நம்பி
ஆனால் இந்த முறை நரேந்திர மோடி மாஜிக்கை வைத்து உ.பியில் நிறைய சீட்களை வெல்ல அது திட்டமிட்டது. எனவேதான் மோடியை அவரது குஜராத்தில் நிற்க வைக்காமல் வாரணாசிக்கு கொண்டு வந்துள்ளது.

குஜராத்திலும் போட்டியிடுவாரா மோடி
வாரணாசி தவிர குஜராத்திலும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அனேகமாக அகமதாபாத் கிழக்கு அல்லது வதோதராவில் அவர் போட்டியிடலாமாம்.

மார்ச் 19ம் தேதி தெரியும்
குஜராத்துக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 19ம் தேதிதான் இறுதி செய்யவுள்ளது பாஜக. அப்போது மோடி அங்கும் போட்டியிடுவாரா என்பது தெரிய வரும்.

அப்ப.. அத்வானிக்கு
அத்வானியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். எனவே அவருக்கும் சீட் கொடுத்தாக வேண்டியுள்ளது. அவர் குஜராத்தில்தான் போட்டியிடுவார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்தும் மார்ச் 19ம் தேதிதான் தெரிய வரும்.

வருண் காந்திக்கு சுல்தான்பூர் - அம்மா மேனகாவுக்கு பிலிபிட்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் பிலிபிட் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். அவரது மகன் வருண் காந்தி சுல்தான்பூரில் நிறுத்தப்படுகிறார்.

ஜான்சியில் உமா பாரதி
முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் உமா பாரதி, உ.பியிலிருந்து இந்த முறை இடம் மாறியுள்ளார். ஜான்சி தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications