‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ தந்த என் தந்தையை மறந்து விட்டீர்களே மோடிஜி...: லால் பகதூர் மகன் ஆதங்கம்
பெரேலி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை மத்திய அரசு மறந்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார் அவரது மகன் அனில் சாஸ்திரி.
நேற்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் 145வது பிறந்தநாள் கொண்டாடப் பட்டது. அக்டோபர் இரண்டாம் தேதி மகாத்மாவின் பிறந்தநாள் மட்டுமின்றி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் ஆகும்.
இந்நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை கொண்டாடிய மத்திய அரசு, லால் பகதூர் சாஸ்திரியை மறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி கூறுகையில், ‘இது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எங்கள் அப்பாவை நினைவுபடுத்தும் வகையில் பிரதமர் மோடி அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம் ' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எனது தந்தையின் கோஷமான "ஜெய் ஜவான் மற்றும் ஜெய் கிசான்" தேர்தலுக்கும், சுதந்திர தின உரையிலும் சுட்டிக்காட்டும் போது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், நினைவை போற்றும் வகையிலும் ஒரு நிகழ்வையாவது ஏற்பாடு செய்யவேண்டும்' என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல், பிறந்த நாளுக்காக நாடு முழுவதும் நாளிதழ்களில் கால் பக்க விளம்பரங்களை வெளியிடும் மத்திய, மாநில அரசுகள் ஏன் எனது தந்தையின் நினைவை மட்டும் மறந்துவிட்டன என்று அனில் சாஸ்திரி கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications