சத்தீஸ்கர் மாநில முதல்வர் வேட்பாளரை தைரியம் இருந்தால் காங். அறிவிக்கட்டும்..: மோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சவால் விட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில 2-ம் கட்ட தேர்தலையொட்டி இன்று 5 பொதுக்கூட்டங்களில் நரேந்திர மோடி பங்கேற்றார். பீமேதரா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவின் போது மாவோயிஸ்டுகள் வன்முறையில் ஈடுபட்டது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தலின் போது இத்தகைய தாக்குதல்களில் உயிரிழக்கும் அதிகாரிகளின் பெயர்களைப் பதிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் தனி இணையதளம் ஒன்றை தொடங்க வேண்டும்.

இந்த மாநிலத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். எங்கே தைரியம் இருந்தால் அஜீத் ஜோகியின் பெயரை அறிவித்து பார்க்கட்டுமே? சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து ஊழல்களின் பின்னணியிலும் அஜீத் ஜோகிதான் இருக்கிறார். அதனால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிடும் என்ற பயம் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றுகிறது. இந்த மாநிலம் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது எனில் மத்திய அரசுதான் காரணம். 2014ஆம் ஆண்டு டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும். கருத்துக் கணிப்புகளை கண்டு காங்கிரஸ் அச்சப்படுகிறது.
மாவோயிஸ்டுகளுடன் கொல்லைப்புற வழியாக ரகசிய கூட்டணி அமைத்திருக்கிறது காங்கிரஸ். இம்மாநிலத்தில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மையான வெற்றியை வாக்காளர்கள் தர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications