வெற்றிக்கு என்னாச்சு? சைதை துரைசாமி மகனை தேட இன்று களமிறங்குகிறது கடற்படை! இமாச்சலில் தொடரும் தேடல்
சிம்லா: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி இமாச்சல் பிரதேசத்தில் காணாமல்போன நிலையில் அவரை நதியில் தேடும் பணியில் இன்று கடற்படை களமிறக்குகிறது.
அதிமுகவை சேர்ந்தவர் சைதை துரைசாமி. சென்னை முன்னாள் மேயராகவும், சைதாப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்த மனிதநேய ஐஏஎஸ் அகாடமியை நடத்தி வருகிறார். இவருக்கு வெற்றி என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் வெற்றி கார் மூலம் இமாச்சல பிரதேசத்துக்கு சென்று இருக்கிறார். கடந்த 5 ஆம் தேதி அம்மாநிலத்தின் காசாங் நாலா பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இவரது கார் சென்று கொண்டு இருந்தபோது அருகே இருந்த சட்லஜ் நதியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறது. சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் அவரது உதவியாளரான திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் கோபிநாத் என்பவரும் இமாச்சல பிரதேசத்துக்கு காரில் பயணித்து உள்ளார். 32 வயதான இவர் விபத்தில் படுகாயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுநர் தன்சின் இமாச்சல பிரதேச மாநிலத்தின் விபிஓ டாபோ என்ற பகுதியை சேர்ந்தவராவார். இவர்களுடன் சென்ற சைதை துரைசாமி மகன் வெற்றியை மட்டும் காணவில்லை. 45 வயதான வெற்றி சென்னை நந்தனம் சிஐடி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவரை தேடும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, உள்ளூர் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றியை கண்டுபிடித்தால் ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக சைதை துரைசாமி அறிவித்தார். தேடுதல் பணியில் வெற்றியின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை சட்லஜ் நதியில் இறங்கி நீர் மூழ்கி வீரர்கள் தேடினர். ஆழமான பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. வற்றாத ஜீவ நதியாக உள்ள சட்லஜ் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நதியாகும். எனவே நதி செல்லும் வழியெங்கும் தேடுதல் பணி தொடர்கிறது. டிரோன் உதவியோடு தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் இன்று இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் தேடுதல் பணியில் களமிறங்குகிறார்கள்.
திரைப்பட இயக்குனரும் தொழிலதிபருமான வெற்றி தனது தந்தையுடன் சேர்ந்து மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியைம் கவனித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற அவர், பயணத்தை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மாலை விமான நிலையம் நோக்கி காரில் புறப்பட்டு உள்ளார். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications