லடாக் தேர்தல்.. காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி அதிக இடங்களில் வெற்றி.. பாஜகவுக்கு ஷாக்
லடாக்: லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை தேர்தல் முடிவு கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இரு யூனியன் பிரதேசங்களும் துணை நிலை ஆளுநரின் நிர்வாகத்தில் உள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், அண்மையில் லடாக்கின் கார்கில் மலை கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை அந்தந்த மாநிலங்களுக்குள் சுயாட்சி வழங்கப்பட்ட தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை உருவாக்க அனுமதித்துள்ளது. அதன்படி லடாக், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுராவில் சில மாவட்டங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
லடாக்கில் கார்கில் மற்றும் லே மாவட்டத்திற்கு இந்த அதிகாரம் இருக்கிறது. தன்னாட்சி மலையக கவுன்சில்கள் கிராம பஞ்சாயத்துகளுடன் இணைந்து பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி, நில பயன்பாடு, வரி விதிப்பு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவுகளை எடுக்கிறது. கார்கில் மாவட்டத்தை பொறுத்த அளவில் தற்போதுள்ள கவுன்சிலின் பதவிக்காலம் இந்த மாதம் 1ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது.
முன்னதாக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த பெரோஸ் அகமது கான் இந்த கவுன்சிலுக்கு தலைவராக இருந்தார். தற்போது பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 95,388 வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 30 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி 10 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மீதமுள்ள ஐந்து இடங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications