பறந்து வந்து தாக்கிய கற்கள்! எல்லையில் அத்துமீறும் நேபாள மக்கள்.. திடீர் அத்துமீறல்! என்ன நடக்கிறது?
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் எல்லையாக உள்ள 'காளி' ஆற்றின் கரையோரங்களில் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நேபாளத்தை சேர்ந்தவர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆறு இமயமலையில் தொடங்கி உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் வழியாக பயணித்து பீகார் மாநிலத்தில் கங்கை நதியுடன் இணைந்து விடுகிறது. இது தொடங்கும் இடத்தில் காளி கோயில் இருப்பதால் இந்த ஆறு காளியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. ஆனால் இது நேபாளத்தில் கண்டகி ஆறு என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 300 கி.மீ நீளமும் 7620 சதுர கி.மீ பரப்பளவும் கொண்ட இந்த ஆறு இயற்கையாக இந்தியாவுக்கும் நேபாளுக்கும் இடையே எல்லையாக செயல்படுகிறது. இந்த ஆற்றை கடந்து இந்தியாவில் ஊடுருவுவது என்பது மிகவும் கடினமான காரியம். ஏனெனில் இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்.

பாலம் மூடல்
கோடை காலத்தில் இமயமலையில் பனி உருகுவதால் இந்த ஆற்றில் பாயும் நீரின் அளவு அதிகரிக்கும். அதேபோல குளிர் காலங்களில் ஆறு ஏறத்தாழ உரை பனிக்கு நெருக்கமாக இருக்கும். எனவே ஆற்றை கடப்பது முடியாத காரியமாகும். எனவே நேபாளத்தையும், இந்தியாவையும் இணைக்கும் வகையில் ஒரு தொங்கு பாலத்தை இந்திய அரசாங்கம் அமைத்தது. ஆனால் இந்த பாலம் வழியாக முறைகேடாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

பாதுகாப்பு சுவர்
அதேசமயம் இந்த பாதைதான் நேபாள வியாபாரிகளுக்கு இருக்கும் ஒரே வழி. போதை பொருட்கள் சர்ச்சையையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பாதை மூடப்படுவதாக இந்திய அரசு அறிவித்தது. இதற்கு நேபாள் வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு மேலெழுந்தது. என்ன சொன்னாலும் பாலத்தை திறக்க இந்திய தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து ஆற்றில் நீரோட்டம் குறைவாக இருக்கும் பகுதி வழியாக சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். எனவே உஷாரான இந்தியா ஆற்றின் கரையோரம் பாதுகாப்பு சுவரை எழுப்ப முடிவெடுத்தது.

கல்வீச்சு
இதன்படி கடந்த 6ம் தேதி பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலாவில் இந்த கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சுவர் எழுப்புவதற்கு அக்கரையில் உள்ள நேபாள மக்களும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறியும் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில் பணியாட்கள் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பணிகள் ஒரு வாரம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மீண்டும் பணிகள் தொடங்கிய நிலையில் கல் வீச்சு சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு
இந்த சம்பவத்தில் பணியாட்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பர் லாரியின் கண்ணாடியும் உடைந்துள்ளது. எனவே பணியாட்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய திட்டத்தின் செயற்பொறியாளர் ஃபர்ஸான் அகமது, "நாங்கள் இங்கு இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறோம். ஆனால் எங்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பளித்தால் மட்டுமே எங்களால் தொடர்ந்து வேலை பார்க்க முடியும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications