இனி 16 வயதில் குற்றம் செய்தாலும் கடும் தண்டனைதான்.. இளம்சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம்
டெல்லி: இளஞ்சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இதுவரை 18 வயதுக்குட்பட்டோர் எந்தப் பெரிய குற்றத்தைச் செய்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் நிலை அகலுகிறது. இந்த வயதை மத்திய அரசு தற்போது 16 ஆக குறைத்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர்களில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரை மட்டும் தனியாகப் பிரித்து இளம் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் அவர் தனியாக விசாரிக்கப்பட்டார். அவர் மைனர் என்பதால் அவருக்கு கடும் தண்டனை கிடைக்க வழியில்லாமல் போனது. ஆனால் மொத்த குற்றவாளிகளிலேயே இந்த மைனர்தான் மிகக் கொடூரமாக அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, இரும்பு பைப்பால் கொடூரமாக பிறப்புறுப்பில் தாக்கி படுகாயப்படுத்தியவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றவாளிக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும், தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று குரல்கள் உரத்து ஒலித்தன. அதற்கேற்ற வகையில் சட்டத்தைத் திருத்தி வயதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.
இதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க முடியாது. இளங்குற்றவாளிகள் என்ற பிரிவில், அவர்களுக்கு குறைந்த தண்டனைதான் வழங்க முடியும். இதனால், இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பை தற்போது உள்ள 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இளஞ்சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இளஞ்சிறார் வயது வரம்பை 16 ஆக குறைக்கும் வகையில், திருத்தம் செய்வது பற்றி இளஞ்சிறார் நீதி வாரியம் பரிசீலித்து முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட கடும் குற்ற செயல்களில் ஈடுபடும் 16 முதல் 18 வயது உடையவர்களை, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் வைத்து விசாரிப்பதா, அல்லது நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதா எனவும் சிறார் சீர்திருத்த வாரியம் பரிசீலிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications