பாஜக வாக்குகளுக்கு டார்கெட்.. வாஜ்பாய் பெயரில் புதிய கட்சி! ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமீப நாட்காளாக ஜார்க்கண்ட் தொடர்பான செய்திகள், தேசிய அளவில் பெரும் கவனம் பெற்றிருந்தன. அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதிலிருந்து, அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது. ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், தற்காலிக முதலமைச்சராக சம்பாய் சோரன் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ஹேமந்த் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், அவர் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதில் அதிருப்பதியடைந்த சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமானார். நடப்பாண்டு இறுதியில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கட்சி தாவல் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சம்பாய் சோரனை வைத்து காங்கிரசுக்கு செக் வைக்க பாஜக காய் நகர்த்தி வரும் நிலையில், பாஜகவுக்கு யஷ்வந்த் சின்ஹா டாக்கெட் வைத்து 'வாஜ்பாய்' பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார்.
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிற்க வைக்கப்பட்டவர்தான் இந்த யஷ்வந்த் சின்ஹா. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றி அனுபவம் பெற்ற இவர், கடந்த 2018ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து தற்போது வாஜ்பாய் பெயரில், 'அடல் விசார் மஞ்ச்' எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சி ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். பாஜக அடல் பிஹாரி வாஜ்பாயின் கொள்கைகளில் இருந்து பாஜக விலகிச் செல்கிறது என்று கடுமையாக விமர்சித்து வந்த சின்ஹா, தற்போது அவர் பெயரில் கட்சியை தொடங்கியிருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கட்சி குறித்து சின்ஹா கூறுகையில், "நேர்மையானவர்களுக்கு கட்சி முதல் முன்னுரிமை அளிக்கும். அடல் விசார் மஞ்ச் ஒரு தன்னார்வ அமைப்போ, நன்கொடை வசூலிக்கும் கட்சியோ அல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் கட்சியாகவே இருக்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைதி சூழலை கெடுக்கவே, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இங்கு முகாமிட்டுள்ளார். இம்மாநிலத்தில் நிச்சயம் கவலரம் ஏற்படத்தப்படும். அதை பாஜக அறுவடை செய்யும். பாரதிய ஜனதா கட்சிக்கு இந்து-முஸ்லிம் தவிர வேறு எதுவும் தெரியாது" என்று விமர்சித்துள்ளார்.
சின்ஹா உருவாக்கியுள்ள கட்சி, பாஜகவின் வாக்கு வங்கியை குறி வைக்கும் என்பதால், அதை சிதறாமல் வைத்துக்கொள்ள கட்சி தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications