விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக.. கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்
ஒட்டாவா: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹான்னா, மியா கலிஃபா, கிரெட்டா தன்பெர்க் என பல்வேறு சர்வதேச பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தீர்மானம்
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனடா நாடாளுமன்றத்தில் புதிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகளுக்கான சர்வதேச ஆதரவு என்ற இந்த தீர்மானத்திற்கு முக்கியத்துவம் அளித்து கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சி முன்மொழிந்தது.

விவசாயிகள் மீது மனித உரிமை மீறல்
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களைக் கண்டிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் நடவடிக்கைகளைக் கனடா அரசு கண்டிக்க வேண்டும் என்றும் டெல்லியில் விவசாயிகள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி
இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றி கனேடியன் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங் உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வர விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். இருப்பினும், அவரது விசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த எம்பி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டது. அதுவே முதல்முறையாகும்.

காரணம் என்ன?
இந்தியாவில் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த சிலர் காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் காலிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வெளிநாடுகள் இந்த அமைப்புகளுக்குத் தடை இல்லை. அப்படி காலிஸ்தான் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாக நடத்தப்பட்ட சில நிகழ்ச்சிகளில் ஜக்மீத் சிங் கலந்துகொண்டிருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஏற்கவே, கடந்தாண்டு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். விவசாயிகள் அமைதியான முறையில் போராட அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது கருத்தை இந்தியா ரசிக்கவில்லை. இதன் காரணமாக டெல்லியிலுள்ள கனடா தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டித்திருந்தது.












Click it and Unblock the Notifications