முதன் முதலாக சப்பாத்தி போட்டது போலவே சபாநாயகர் பொறுப்பும் சவாலானதே..: சுமித்ரா மகாஜன்
டெல்லி: தாம் முதன் முதலாக சப்பாத்தி போட்டது போலவே தற்போது ஏற்றுள்ள சபாநாயகர் பொறுப்பும் சவாலானதே என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவின் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்காக நேற்று சபை கூடியது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், இந்தூர் தொகுதியில் இருந்து 8 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுமித்ரா மகாஜனை புதிய சபாநாயகராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இத்தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் அத்வானி வழிமொழிந்தார்.
சுமித்ரா மகாஜனுக்கு ஆதரவாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் 13 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.
அதன் பின், இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதைத் தொடர்ந்து புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தாற்காலிக சபாநாயகர் கமல்நாத் அறிவித்தார்.
சபை நடவடிக்கைகள் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சுமித்ரா மகாஜன் கூறியதாவது:
ஒவ்வொரு புதிய பதவிப்பொறுப்பும் மனிதர்களுக்கு ஒரு சவாலாக விளங்குகிறது. என்னைப் பொருத்தவரை, முதன் முதலாக சப்பாத்தி போட்டது, முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்டது ஆகியவையும் சவாலாகவே இருந்தன.
இப்போது எனக்கு கட்சி இந்தப் பொறுப்பை அளித்துள்ளது. இது எனக்கு மற்றொரு சவாலாகும். என்னை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரித்துள்ளது முக்கியமான அம்சமாகும்.
அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முடிந்தவரை பாடுபடுவேன்.
இவ்வாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார்.


Click it and Unblock the Notifications
