பதன்கோட் தாக்குதலில் தொடர்பா? சர்ச்சைக்குரிய எஸ்.பி. சல்வீந்தர்சிங்கிடம் கிடுக்குப்பிடி விசாரணை!!
சண்டிகர்: பதன்கோட் தாக்குதல் சம்பவத்தின் தொடக்கம் முதலே தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் போலீஸ் எஸ்.பி. சல்வீந்தர்சிங்கிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தின் மீது சனிக்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட போதும் மேலும் பலர் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் 3-வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

பயங்கரவாதிகளுடனான மோதலில் லெப். கர்னல் உட்பட மொத்தம் 7 ராணுவ வீரர்கள் வீரமரணடைந்துள்ளனர். இதனிடையே இந்த தாக்குதலுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் சிலர் உதவியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.
குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு தன்னையும் அலுவலக ஜீப், மொபைல் போனையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக புகார் கொடுத்த பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் எஸ்.பி. சல்வீந்தர்சிங் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சல்வீந்தர்சிங் மற்றும் அவரது நண்பர்களை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் வழிமறித்து அவரை கடத்தியதுடன் வாகனத்தையும் பறித்து சென்றதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அவரது மொபைல் போனில் இருந்தே அந்த மர்ம நபர்கள் பாகிஸ்தானுக்கு பேசியதும் பின்னர் தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவதுக்கு சில மணிநேரங்களுக்கு பின்னர் தீவிரவாதிகள் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அதே நேரத்தில் சல்வீந்தர்சிங்கின் வாகனம், பதன்கோட் விமானப் படை தளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பஞ்சாப்-ஹிமாச்சலபிரதேச எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகையால் சல்வீந்தர்சிங்கின் வாகனத்தில்தான் தீவிரவாதிகள் பதன்கோட் விமான தளத்துக்கு வந்திருக்கலாம் என்பது உறுதியானது. ஒருபக்கம் ஊடுருவிய பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்னொரு புறம் தீவிரவாதிகள் ஊடுருவியது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணை வளையத்துக்குள் சல்வீந்தர்சிங்கும் கொண்டுவரப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே காவல்துறையில் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளனவர்; அண்மையில் கூட பெண் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்தவர் என்ற புகாரும் கிளம்பியிருந்தது. இதனால் சல்வீந்தர்சிங் தாம் கடத்தப்பட்டது, வாகனத்தை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றது என கொடுத்திருக்கும் அத்தனை புகார்கள் குறித்தும் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் சல்வீந்தர்சிங்கிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சல்வீந்தர்சிங், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவன் நான்.. என் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் சில அவதூறு புகார்கள் கொடுக்கப்பட்டன.. நான் நேர்மையானவன் என்பதை எந்த விசாரணையிலும் நிரூபிக்க தயராகவே இருக்கிறேன் என்கிறார்.
எந்த புற்றில்தான் கருநாகம் குடியிருக்கிறதோ?
முன்விரோதம் காரணமா?
இதனிடையே எஸ்.பி. சல்வீந்தர்சிங் கூறும் கடத்தல் நாடகம் பொய்யாகவும் இருக்கலாம்; அவரை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிலர் கடத்தி இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications