"மக்களை ஏமாற்றுபவனே சிறந்த தலைவர்.." நிதின் கட்கரி சொன்ன பாயிண்டு.. உற்று பார்த்த தொண்டர்கள்
டெல்லி: அகில் பாரதிய மகா அனுபவ் பரிஷத் என்ற அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மக்களை நன்றாக ஏமாற்ற முடிந்தவரே சிறந்த தலைவராக முடியும் என்று சொல்லியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் அரசியலில் உண்மை பேசுவோருக்கு இடமில்லை என்றும் உண்மை பேசுவது அரசியலில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூட அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மூத்த அமைச்சராக இருக்கிறார் நிதின் கட்கரி.. சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் கட்கரி நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் பல முக்கிய மாற்றங்கள் கொண்டு வருகிறார். அகில் பாரதிய மகா அனுபவ் பரிஷத் என்ற அமைப்பு நடத்திய மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

நிதின் கட்கரி
பொதுமக்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ வேண்டும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொதுமக்கள் குறுக்குவழிகளைத் தவிர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். குறுக்குவழிகள் விரைவான பலன்களை அளித்தாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது அது நம்பகத்தன்மையைக் குலைக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய கட்கரி, "எதையும் சாதிக்கக் குறுக்குவழி உண்டு. ஆனால், விதிகளை மீறி சாலை கடக்க முற்பட்டால், சிவப்பு விளக்கை வண்டியை ஓட்டினால், அது ஆபத்தை விளைவிக்கும். உண்மை, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு போன்றவை தான் நமக்கு முக்கியமானது. குறுக்கு வழியில் போகும் போது தற்காலிக வெற்றி கிடைக்கலாம். ஆனால், நீடித்த வெற்றி உண்மைக்கே கிடைக்கும். பகவத் கீதையில் கண்ணன் கூறியது போல், இறுதியில் உண்மை வெல்லும்" என்று கூறினார்.
மக்களை ஏமாற்றுபவரே தலைவர்
அதேநேரம் தனது துறையில் (அரசியல்) உண்மை பேசுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கட்கரி ஜாலியாக குறிப்பிட்டார். அவர் மேலும் "நான் பணிபுரியும் துறையில் மனதார உண்மை பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. மக்களை நன்றாக ஏமாற்ற முடிந்தவரே சிறந்த தலைவராக முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் மகா அனுபவ் பிரிவின் நிறுவனர் சக்கரதர் சுவாமியின் போதனைகளைப் பாராட்டினார். சக்கரதர் சுவாமி போதனைகளைக் கேட்டால் அதை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் உத்வேகம் ஏற்படும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "சக்கரதர் சுவாமி சத்தியம், அகிம்சை, அமைதி, மனிதநேயம், சமத்துவம் போன்ற விழுமியங்களைப் போதித்தார்.. சத்தியமே வாழ்க்கையின் அடிப்படை.. அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
முதல்முறை இல்லை
நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. அதேநேரம் நிதின் கட்கரி இதுபோல பேசுவது இது முதல்முறை இல்லை. அவர் கடந்த காலங்களிலும் பல நேரங்களில் இதுபோல ஜாலியாக பேசியிருக்கிறார்.
முன்னதாக கடந்த மாதம் இதுபோல ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "சமூகத்தில் சிலர் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இது அரசியல்வாதிகளை ஒழுங்குபடுத்துகிறது. அரசியல்வாதிகளால் கூடச் செய்ய முடியாத காரியங்களை நீதிமன்றங்கள் மூலம் செய்ய முடியும். எனவே, இதுபோல வழக்கு போடும் நபர்களும் நமக்குத் தேவைதான்" என்றார்.
சந்தர்ப்பவாத அரசியல்
கடந்த ஆண்டு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் குறித்து அமைச்சர் நிதின் கட்கரி விமர்சித்திருந்தார். பலரும் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் இருக்க விரும்புவதாகவும் இந்தச் சித்தாந்தச் சீரழிவு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் தெரிவித்தார். சில தலைவர்கள் தங்கள் சித்தாந்தத்தில் உறுதியாக இருந்தாலும், அவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications