நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் 24 மணிநேர உண்ணாவிரதம்!
பாட்னா: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 24 மணி நேர உண்ணாவிரதத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.
விளைநிலங்களை அரசு கையகப்படுத்தும் போது விவசாயிகள் பாதிப்படையாத வகையில் 2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவந்தது.

அதில், விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் போது 80% பேர் ஒப்புதல் இருக்க வேண்டும்; கையகப்படுத்திய பின்னர் 5 ஆண்டுகாலத்துக்குள் அரசு பயன்படுத்தாவிட்டால் மீண்டும் விவசாயிகளிடமே நிலம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்தன. இதற்கு அனைத்து கட்சிகளுமே வரவேற்பு தெரிவித்திருந்தன.
ஆனால் மோடி அரசோ அண்மையில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து அவசர சட்டத்தை அமல்படுத்தியது. அதில் நிலத்தைக் கையகப்படுத்த விவசாயிகளின் 80% பேர் ஒப்புதல் தேவை இல்லை; 5 ஆண்டுகாலத்துக்குப் பின்னரும் அரசிடமே நிலம் இருக்கும் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படிருந்தன.
அதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை நீக்கிவிட்டு பொதுசட்டமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வகையில் லோக்சபாவில் இதற்கான தனி மசோதா கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியது. அண்ணா தி.மு.க. மட்டுமே இந்த மசோதாவை ஆதரித்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
லோக்சபாவில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று காலை முதல் 24 மணி நேர உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய இந்த உண்ணாவிரதத்தில் நிதிஷ்குமாருடன் அக் கட்சியின் மாநில தலைவர், நிர்வாகிகள், கட்சியின் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications