கடும் விமர்சனங்கள் எதிரொலி... நாடாளுமன்ற கேண்டீனில் உணவு பொருட்கள் விலை 'கணிசமாக' உயர்வு!
டெல்லி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் லட்சக்கணக்கில் ஊதியம், அலவன்ஸ் என பெற்ற போதும் அவர்களுக்கான நாடாளுமன்ற கேண்டீனில் உணவு விலை என்னவோ அம்மா உணவகம் ரேஞ்சுக்கு மலிவோ மலிவு.. நாடு முழுவதும் இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக தற்போது இந்த கேண்டீனில் உணவு பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளனர்.
நாடாளுமன்ற கேண்டீனில் ஒரு டீ விலை ரூ1. சூப் விலை ரூ5.50; 1 சப்பாத்தி ரூ1, சாதம்- ரூ2; தோசை ரூ4 என்கிர ரேஞ்சில்தான் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி மலிவு விலையில் விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கு மானியமாக ரூ16 கோடியும் ஒதுக்கப்பட்டு வந்தது.

ஒருவேளை சோற்றுக்கே இந்த நாடு மக்கள் பெரும்பாடு படும் நிலையில் சொகுசு வாழ்க்கை வாழும் எம்.பி.க்களுக்கு இந்த அளவுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது எப்படி சரியாகும்? என்பது குறித்து நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இது குறித்து பரிசீலிக்குமாறு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் தற்போது நாடாளுமன்ற கேண்டீனில் உணவுப் பொருட்கள் விலை சற்று கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி ரூ18-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெஜ் தாலி இனி ரூ30; ரூ33க்கு விற்பனை செய்யப்பட்ட நான் வெஜ் தாளி ரூ60க்கும் விற்பனை செய்யப்படும். சிக்கன் கறியின் விலை ரூ29-ல் இருந்து ரூ40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படி கணிசமாக உணவுப் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது லாபமும் இல்லை... நட்டமும் இல்லை என்ற அடிப்படையில் இனி நாடாளுமன்ற கேண்டீன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்ற கேண்டீனுக்கு ஆண்டுக்கு ரூ16 கோடி மானியமாக வழங்கப்பட்டு வந்ததும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications