கருத்துச் சுதந்திரம் என்பது நாட்டைச் சீர்குலைக்கும் உரிமை அல்ல!- அருண் ஜெட்லி
டெல்லி: தேசத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாக கருத்துச் சுதந்திரத்தை சிலர் கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது, என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை மத்திய அரசு நசுக்கி வருவதாக எதிர்க் கட்சிகள், சமூக அமைப்புகள் சமீப காலமாக கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

'பாரத மாதாவுக்கு ஜே' என்று முழங்குவது தொடர்பாகவும் தேசிய அளவில் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கூறியதாவது:
கருத்துச் சுதந்திரமும், தேசியமும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நமக்குப் பிடித்த விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும், பிடிக்காத விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசமைப்புச் சட்டம் முழு சுந்திரம் அளித்துள்ளது.
அதே நேரத்தில் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கவும், தேசவிரோத செயல்களில் ஈடுபடவும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படவில்லை.
தேசியம் என்பது நமது நம்பிக்கைகள், நாட்டின் அடிப்படை சார்ந்த விஷயம். 'பாரத மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் குறித்து பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று கேட்கிறீகள். அது விவாதத்துக்குரிய விஷயம் அல்ல என்பதில் பாஜக திடமாக உள்ளது.
ஏனெனில், 'பாரத மாதாவுக்கு ஜே' என்று கூறுவதில் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்த கோஷம் உற்சாகமாக எழுப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.
அரசியல்ரீதியாக பலவீனமாகிவிட்ட முக்கிய எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தனது மரியாதையைத் தானே குறைத்துக் கொள்கிறது. பிகார், மேற்கு வங்கம், தமிழகம் போன்ற மாநிலத் தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியில் கடைசியாகப் ஓட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.
உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரில் சிறந்த நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
இப்போது நமது நாட்டுக்கு உறுதியான தலைமை, தேசிய நலன் சார்ந்த கொள்கைகள், சிறந்த நிர்வாகம் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலனளிக்கக் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்," என்றார் அருண் ஜெட்லி.












Click it and Unblock the Notifications