மேடையில யார்னு பாருங்க! பதவியேற்புக்கு நேரில் வந்து வாழ்த்திய ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்
புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் இன்று பாஜக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்தார்.
லோக்சபா தேர்தலோடு ஒடிசா, ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று ஒடிசா மாநில முதல்வரானார். அப்போது முதல் கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று அவரே முதலமைச்சராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் தான் அண்மையில் நடந்து முடிந்த ஒடிசா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 51 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது. பா.ஜ.க 78 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது.
இந்நிலையில் பாஜக சார்பாக ஒடிசாவில் முதலமைச்சர் ஆகப்போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஒடிசாவில் பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.
ஒடிசா முதல்வராக தேர்வு செய்யப்பட்ட மோகன் சரண் மாஜி பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவரோடு கே.வி. சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக்கும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மோகன் சரண் மாஜி நேரில் சென்று நவீன் பட்நாயக்கை அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று இன்று பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்.
பதவியேற்பு விழா மேடையில் அவரையும் அமரவைத்தது பாஜக. பதவி ஏற்பு விழாவுக்கு வந்த நவீன் பட்நாயக்கை பாஜக தலைவர்கள் கைகூப்பி வரவேற்று அழைத்துச் சென்று மேடையில் அமர வைத்தனர். 24 ஆண்டு காலமாக தான் ஒடிசா முதலமைச்சராக இருந்த நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்றதை மேடையில் அமர்ந்தபடி பார்த்தார் நவீன் பட்நாயக்.
முதல்வர் பதவியை இழந்த நவீன் பட்நாயக், புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றது குறித்து, "அவரது தலைமை, வலிமை மற்றும் திறன் ஆகியவை ஒடிசா மக்களின் சேவையில் செயல்படும் என்று நம்புகிறேன்" என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் ஒடிசா சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, பாஜக - பிஜேடி இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பிரதமர் மோடியும் நவீன் பட்நாயக்கும் ஒருவரையொருவர் தீவிரமாக விமர்சித்துக் கொண்டனர். எனினும் இன்று பதவியேற்பு நிகழ்வில் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒடிசா முதல்வர் நாற்காலியை இழந்திருந்தாலும், ஒடிசா மாநில வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய நவீன் பட்நாயக், ஒரு நல்ல மனிதராகவும் இன்று நடந்து கொண்டதாகவும், தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் கண்ணியமான மனிதராக நடந்து கொண்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications