ஜம்மு காஷ்மீர் புதிய சட்டசபையின் முதல் தீர்மானமே என்ன தெரியுமா? பாஜகவை தெறிக்கவிடும் உமர் அப்துல்லா!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை கூட்டத்தில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதால் மத்திய பாஜக அரசு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த முடிவுக்கு எதிராக முதல் தீர்மானத்தைக் கொண்டு வருவோம் என முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா அறிவித்துள்ளது புதிய விவாதங்களை உருவாக்கி உள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. இந்த தேர்தலில் 86 வயதாகும் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனத் தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரது மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா போட்டியிடுவாரா? இல்லையா? என்கிற அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் என்டிடிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் உமர் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபையின் முதல் தீர்மானமே அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களின் உணர்வுகளை இந்தியாவின் இதர பகுதிகளுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்கே நாம் தெரிவிக்க வேண்டும். அதேபோல மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டசபையானது ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதன் மூலமே சரி செய்யவும் முடியும். எதுவும் எளிதாக கிடைத்துவிடாது; ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கப் போராடித்தான் ஆக வேண்டும். இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications