வீணை, லேப்டாப், வாட்ச், 2 பெல்ட், ப்ளூ கலர் சட்டை, ராமேஸ்வரம் வீடு.. இதுதான் கலாமின் சொத்து!
பெங்களூரு: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரில் உள்ள சில சொத்துக்களும், அவரது புத்தகங்கள், படைப்புகள் மூலம் கிடைக்கும் ராயல்டியும் அவரது மூத்த சகோதரர் முகம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயருக்கே செல்லவுள்ளன.
மரைக்காயருக்கு தற்போது வயது 99 ஆகிறது. ராமேஸ்வரத்தில் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் மரைக்காயர்.
அப்துல் கலாம் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து முடித்தவர். இதனால் தனது சொத்துக்கள் மற்றும் ராயல்டிகளுக்கு வாரிசாக தனது அன்புக்குரிய அண்ணனுக்கே கொடுத்துள்ளாராம் கலாம்.

உயில் இல்லை
இதுதொடர்பாக கலாம் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. உயில் எழுதி வைக்கவும் அவர் விரும்பியதில்லையாம். இதுகுறித்து கலாமுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், நாங்கள் உயில் குறித்து பல தடவை அவரிடம் பேசியுள்ளோம். உயில் எழுதுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவரிடம் கூறினோம். ஆனால் அவர் அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுப்பார்.

உயில் எழுத விரும்பவில்லை
உயில் எழுதுவதை அவர் விரும்பியதில்லை. தற்போது அவரது சொத்துக்கள், ராயல்டி முழுமையும் கலாமின் அண்ணனிடமே ஒப்படைக்கப்படுகிறது. கலாம் குடும்பத்தில் அவர்தான் அவர்தான் மூத்தவர் என்பதால் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

நூல்கள்தான் பெரிய சொத்து
கலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லாத சொத்தாக தனது புத்தகங்களைத்தான் கருதினார் கலாம். நிறைய புத்தகங்களைத்தான் அவர் மிகப் பெரிய சொத்தாக விட்டுச் சென்றுள்ளார்.

வீணை, லேப்டாப், வாட்ச், பெல்ட்டு, சட்டை
இது போக, அவருடைய பழமையான பாரம்பரியமான வீணை, ஒரு லேப்டாப், ஒரு கைக்கடிகாரம், 2 பெல்ட்டுகள், ஒரு சிடி பிளேயர், அவருடைய நீல நிறச் சட்டை ஆகியவை இதர சொத்துக்கள் ஆகும்.

டெல்லி வீட்டின் அறைக்கு சீல் வைப்பு
டெல்லியில் கலாம் கடைசியாக வசித்து வந்த எண் 10, ராஜாஜி மார்க் இல்லம் தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அவரது அறையும் கூட பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. துக்க காலம் முடிந்ததும், கலாம் உறவினர்கள் டெல்லி வரவுள்ளனர். அப்போது அவர்கள் முன்பாக இந்த அறை திறக்கப்படும்.

நூல்கள்
கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவை மிகவும் பிரபலமானவை மட்டுமல்ல விற்பனையிலும் முன்னணியில் உள்ளவை. இந்த நூல்களில் சிலவற்றை அவரது உதவியாளர்கள், கலாமுடன் இணைந்து எழுதியுள்ளனர்.

விங்ஸ் ஆப் பயர்
ஆனால் அவரது நூல்களிலேயே தலை சிறந்தது விங்க்ஸ் ஆப் பயர் எனப்படும் அக்னிச் சிறகுகள்தான். 1999ம் ஆண்டு வெளியானது இந்த நூல். இதுவரை இந்த நூல் 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. தொடர்ந்து அமோகமாக விற்பனையாகியும் வருகிறது.

கலாமே அதிகம் வாங்கினார்
அதை விட முக்கியமானது என்னவென்றால் இந்த நூலை கலாமே அதிக அளவில் வாங்கியுள்ளார். அந்த நூலைத்தான் அவர் தான் சந்திக்கும் மாணவர்களுக்கும், பல நூலகங்களுக்கும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார் என்பது நெகிழ்ச்சியான ஒன்றாகும்.

கலாம் அண்ணனுக்கு ராயல்டி
இந்த நூல்கள் மூலம் கிடைக்கும் அனைத்து ராயல்டியும் இனி கலாமின் மூத்த சகோதரருக்கு கிடைக்கும். தற்போது கலாமின் நூல்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் ராயல்டி தொகையும் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிரது.

தொடர்ந்து உதவி வந்தார்
கலாமின் இன்னொரு உதவியாளர் கூறுகையில், கலாம் முடிந்தபோதெல்லாம் தனது உறவினர்களுக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளார். அவ்வப்போது பணம் கொடுத்துள்ளார். மரணத்திற்கு முன்பு கூட அவர் தனது உறவினர்களுக்கு சரியாக பணம் போகிறதா என்று கேட்டு வந்தார்.

பெங்களூரு பிளாட் பேத்திக்கு
கலாமுக்கு பெங்களூருவில் சொந்தமாக ஒரு ஃபிளாட் இருந்தது. இதை அவர் 2013ம் ஆண்டு தனது அண்ணனின் பேத்திக்கு தானமாக கொடுத்து விட்டார். உறவினர்களுக்கு மட்டுமல்லாமல் தனது உதவியாளர்களுக்கும் கூட அவர் நிறைய உதவியுள்ளாராம். டெல்லி அலுவலக இல்லத்தில் பணியாற்றிய அலுவலர்களுக்கும் கூட கலாம் உதவியுள்ளார்.

நோண்புக் கஞ்சிக்காக ஆண்டுதோறும் ரூ. 1.10 லட்சம்
மேலும் வருடா வருடம் ராமேஸ்வரத்தில் உள்ள இஸ்லாமிய ஜமாத்துக்கு ரம்ஜான் சமயத்தில், நோண்புக் கஞ்சி விநியோகிப்பதற்காக ரூ. 1.10 லட்சம் நிதியுதவி அளித்து வந்தாராம் கலாம். மேலும் தனது சேமிப்பையும் கூட அவர் அவ்வப்போது தனது உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவாராம்.

மக்களுக்கு நினைவுகள்
எல்லாவற்றையும் எல்லோருக்கும் அளித்த கலாம், தான் மட்டும் எளிமையின் சின்னமாக வாழ்ந்த மறைந்து போயுள்ளார்... நினைவுகள் என்ற அருமையான சொத்தை மக்களுக்குக் கொடுத்து விட்டு.












Click it and Unblock the Notifications