உயரும் வெங்காய விலை: காங்கிரசின் ரத்தக்கண்ணீரும்… பாஜகவின் ஆனந்த கண்ணீரும்…

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

சில்லறை விலையில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் சமான்ய மக்கள் வெங்காயத்தை நினைத்துக் கூட பார்க்க அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சாம்பாரில் தாளிப்பது போல வெங்காயத்தை வாசனைக்காக போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெங்காய விலை உயர்வு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் ரத்தக்கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வெங்காய விலை உயர்வு பிரச்சினையினால் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவினரோ காங்கிரசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் கிடைத்து விட்டதென ஆனந்த கண்ணீர் விடத் தொடங்கியுள்ளனர்.

நினைத்தாலே கண்ணீர்

நினைத்தாலே கண்ணீர்

வெங்காயத்தின் விளைச்சல் அதிகரிக்கும் காலங்களில் கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால் கடந்த 5 மாத காலமாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தில்தான் உள்ளது.

சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயம் கடந்த சில வருடங்களாகவே 70ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதில்லை. எனவே பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயத்தை போட்டு சமாளித்து வந்த மக்களுக்கு அந்த வெங்காயமும் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எதுவும் கை கொடுக்கவில்லை

எதுவும் கை கொடுக்கவில்லை

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து விலை ஏறு முகமாகவே உள்ளது. தற்போது தரமான வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது.

பதுக்கும் வியாபாரிகள்

பதுக்கும் வியாபாரிகள்

வெங்காய உற்பத்தி குறைந்து விட்டது. மழை காரணமாக வெங்காய அறுவடை தாமதமாகிறது. எனவே விலை உயருகிறது என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி நெருங்கும் நிலையில் பெரும் வியாபாரிகள் அதிக லாபம் சம்பாதிப்பதற்காக வெங்காயத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள். எனவே விலை உயருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ரூ.100 வரை உயரும்

ரூ.100 வரை உயரும்

வெங்காய ஏற்றுமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன, இறக்குமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் விலை கிலோ ரூ.100 வரை உயரலாம் என்று வியாபாரிகள் கூறி வருகிறார்கள்.

தேர்தலில் எதிரொலிக்கும்

தேர்தலில் எதிரொலிக்கும்

வெங்காய விலை உயர்வு இந்திய அரசியலில் குறிப்பாக வடமாநில அரசியல் களத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் வெங்காய விலை உயரத் தொடங்கியதும் டெல்லியில் அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த செலவில் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்தனர்.

ஆட்சியை கவிழ்த்த வெங்காயம்

ஆட்சியை கவிழ்த்த வெங்காயம்

1980-ல் வெங்காய விலை உயர்வு, தேர்தல் களத்தில் இடம் பிடித்தது. இதில் ஜனதா கட்சி ஆட்சியை எதிர்த்து இந்திராகாந்தி வெற்றி பெற்றார். 1998-ல் வெங்காய விலை கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்பட்டது. இதனால் அப்போது மத்தியில் இருந்த ஜனதா கூட்டணி அரசு பெரும் சோதனையை சந்தித்தது. டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியை இழந்தது.

சட்டசபை தேர்தலில்

சட்டசபை தேர்தலில்

இப்போது டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் வெங்காய விலை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இது மாநில ஆளும் கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில்

லோக்சபா தேர்தலில்

லோக்சபா தேர்தலில் ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் வெங்காய விலை வேதனை தரும் ஆயுதமாக மாறி உள்ளது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் வெங்காயம் விலை குறையுமா? 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் வெங்காய விலை ஏற்படுத்தும் விளைவுகளை பொருத்திருந்து பார்க்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indians know Neruda is wrong for they have learned from experience that onions can hurt a lot. Politicians would know this better. How can they ever forget the famous 1998 elections when the BJP bit the dust due to sky high onion prices in Delhi?.
Please Wait while comments are loading...