ராமர் கோவில் விவகாரம்.... ராஜிவ், நரசிம்மராவ் மீது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் சாடல்- காங் 'ஷாக்'
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1986ஆம் ஆண்டு ராமர் கோவிலை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி திறந்தது தவறு; 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை பிரதமர் நரசிம்மராவ் இடிக்கவிட்டது மிகப் பெரிய தோல்வி என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுயசரிதையின் 2-வது தொகுதியான "கொந்தளிப்பான ஆண்டுகள் 1980-96' நூல் நேற்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நூலை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வெளியிட்டார்.

இதில் பிரணாப் முகர்ஜி எழுதியிருப்பதாவது:
- உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை கடந்த 1986ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி திறந்தது அப்போதைய பிரதமர் காந்தியின் தவறாகும். இத்தகைய நடவடிக்கையைத் தவிர்த்திருக்கலாம் என்பதே மக்கள் கருத்து.
- 1992-இல் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம். இது முஸ்லிம்களின் மனதை பெரிதும் காயப்படுத்திவிட்டது. சகிப்புத்தன்மை கொண்ட இந்தியாவின் நற்பெயரையும், பன்முகத்தன்மையையும் சிதைத்துவிட்டது.
- பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவின் மிகப் பெரிய தோல்வி.
- பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருந்தேன். மும்பையில் இருந்த எனக்கு இத் தகவலை அப்போது எனக்கு பாதுகாப்பு அதிகாரியாக ஜெய்ராம் ரமேஷ்தான் தெரிவித்தார்.
- பின்னர் பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்த போது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் அபாயங்கள் குறித்து உங்களுக்கு யாரும் அறிவுரை கூறவில்லையா? சர்வதேச அளவிலான பாதிப்பு குறித்து உணரவில்லையா? இனியேனும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
- அந்த கால கட்டத்தில் மிக முக்கியமான இஸ்லாமிய நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் என்னை சந்தித்த போது, நூற்றாண்டுகாலமாக மத மோதல்கள் இருந்து வரும் ஜெருசலேமில் கூட இத்தகைய நிலைமை இருந்தது இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் கரசேவகர்கள் மூலமாக செங்கற்களை திரட்டும் பணியில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஈடுபட்டது மதரீதியான பதற்றத்துக்கு வழிவகுத்தது.
- -1989 முதல் 1991ஆம் ஆண்டு வரையிலான கால கட்டம் என்பது வன்முறைகளும் சமூகத்தில் பிளவுகளுமாக இருந்த காலம்.
- மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் சமூக அநீதி குறைக்கப்பட்டது; அதே நேரத்தில் நமது மக்களிடையே பல்வேறு பிரிவுகளையும் அது ஏற்படுத்திவிட்டது.
- ஜம்மு காஷ்மீரில் எல்லை கடந்த பயங்கரவாதம், தீவிரவாதம் தலைதூக்கியது.
- ராமர் கோவில்பாபர் மசூதி பிரச்சனை தேசத்தையே உலுக்கியது.
- 1991 மே 21-ல் தற்கொலைத் தாக்குதல் மூலம் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சோகமும் நிகழ்ந்தது.,
- சர்ச்சைக்குரிய ஷா பானு வழக்கில் முஸ்லிம் பெண்கள் மணமுறிவு உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை ராஜிவ் கொண்டு வந்தார். இதற்கு விமர்சனங்கள் எழுந்ததுடன், அவரது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டது. ராஜிவ் ஒரு நவீனத்துவமானர் என்ற இமேஜையும் உடைத்தது இது.
- அதாவது ஷா பானு என்ற முஸ்லிம் பெண் ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அவருக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. இத்தீர்ப்பு வரவேற்பைப் பெற்ற அதே நேரத்தில் இது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என இஸ்லாமிய அமைப்புகள் கருதின. இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத வகையில் முஸ்லிம் பெண்கள் மணமுறிவு உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை ராஜிவ்காந்தி கொண்டு வந்தார். அந்த சட்டத்தின்படி இந்தியாவின் பிற மத பெண்கள் பெறுவதைப் போன்ற ஜீவனாம்சத்தைப் பெற முடியாத நிலை முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டது.
- பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது நான் இடைக்கால பிரதமராக பதவி வகிக்க ஆசைப்படவில்லை. ஆனால், அப்படி ஆசைப்பட்டதாக பல்வேறு கதைகள் வெளிவந்தன. அது உண்மை அல்ல.
இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான பிரணாப் முகர்ஜியே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்களான ராஜிவ் காந்தி மற்றும் நரசிம்மராவை விமர்சனம் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications