காஷ்மீர் தாக்குதலிலும் அரசியல் செய்யும் சட்டீஸ்கர் பாஜக! ஜாதி, மதம்! எப்படி கனெக்ட் பண்றாங்க பாருங்க
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் திருமணமான 7 நாட்களே ஆன நிலையில், ஹனிமூனுக்காக வந்த கடற்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தனது கணவரின் முன்பு மனைவி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கிப்லி இமேஜாக சத்தீஸ்கர் பாஜக சார்பில் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் அவர்கள் சாதியைப் பற்றி கேட்கவில்லை என்று பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்துதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ உடை அணிந்து இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் பெயர்களைக் கேட்டு இந்துவா என்பதை உறுதி செய்விட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், சிலரின் மதத்தை உறுதி செய்வதற்காக பேண்ட் ஜிப்பை கழற்ற சொன்னதாகவும் கூறப்படுகிறது. மதம் பார்த்து மட்டுமே பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒருபக்கம் கூறப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். பெண்கள், குழந்தைகள் கொல்லப்படவில்லை. இந்த தாக்குதலில் ஆண்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் என்பவரும் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. 26 வயதான வினய்க்கு கடந்த 7 நாட்களுக்கு முன்புதான் ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜம்மு காஷ்மீருக்கு தனது மனைவியுடன் ஹனிமூனுக்காக வந்த இடத்தில் அவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவரின் சடலத்தின் முன்பு அவரது மனைவி எந்தவொரு சலனமும் இன்றி அமைதியாக அமர்ந்திருக்கும் படம் காண்போரின் இதயத்தை கணக்கச் செய்துள்ளது. அவரது மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும், அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார், எத்தனை கனவுகளுடன் தனது கணவரை கரம் பிடித்திருப்பார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், சத்தீஸ்கர் பாஜக சார்பில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் அருகே மனைவி அமர்ந்திருக்கும் அந்தப் படத்தை எக்ஸ் தள பக்கத்தில் கிப்லி இமேஜாக பதிவேற்றியுள்ளனர். மேலும் அந்தப் பதிவில், நான் சாதியைப் பற்றி கேட்கவில்லை, மதத்தைப் பற்றி கேட்டேன். எனக்கு அது நினைவில் இருக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
धर्म पूछा, जाति नहीं...#Pahalgam#PahalgamTerroristAttack pic.twitter.com/yekBB0woL8
— BJP Chhattisgarh (@BJP4CGState) April 23, 2025
இந்தப் பதிவிற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதை வைத்து கூட அரசியல் ஆதாயம் தேடுவதா என்று பாஜகவுக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு பாஜகவினர் அரசியல் ஆதாயம் காண்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பாஜகவினர் உள்ளிட்டோர் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணிக்கும் வகையில், நீ செட்டியாரா, தலித்தா, முதலியாரா என சாதிகளை கேட்டு அவர்கள் கொல்லவில்லை. நீ தமிழனா, கன்னடனா, தெலுங்கனா என மொழிகளைக் கேட்டு கொல்லவில்லை. பாஜகவா, காங்கிரஸா, திமுகவா, அதிமுகவா என கேட்டு கொல்லவில்லை. நீ இந்துவா என பெயர்களைக் கேட்டும், ஆடைகளை கழற்றி உறுதி செய்தும் கொன்றுள்ளனர். இந்துக்கள் இனியாவது விழித்துக் கொள்வோம் என்று கூறி ஒருபக்கம் சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சம உரிமை, பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்து, சட்டங்கள் இயற்ற சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அரசமைப்புச் சட்டம் 246 இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. மக்கள் தொகை, சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு, அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாநில அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கே சட்டப்படியான பாதுகாப்பு இருக்கும். மாநில அரசு இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சட்டங்களை இயற்றினால் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளதால், மத்திய அரசே இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நிர்வாக ரீதியாக சமூக பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துது மிகவும் கடினமானது என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதல் சம்பவத்தை வைத்து, மொழி ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவதில்லை. மத ரீதியாகவே தாக்குதல் நடத்தப்படுகின்றன என்று சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணிக்கும் வகையில் பாஜகவினர் அரசியல் ஆதாயம் காண்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பயங்காரவாதத் தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே மதத்தை வைத்து பாஜகவினர் பதிவிட்டு வரும் பதிவுகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் பாஜகவின் இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கண்டனம் தெரித்து பல பின்னூட்டங்கள் இடப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து, அந்த எக்ஸ் தள பக்கப் பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications