காஷ்மீர் தாக்குதல்: சவூதியில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் பிரதமர் மோடி- மத்திய அமைச்சரவை கூட்டம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் 27 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தமது சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவசரமாக நாடு திரும்புகிறார் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரப் படுகொலைச் சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் இருந்து உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொ-டர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி. பின்னர் பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் உடனடியாக ஜம்மு காஷ்மீர் விரைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஶ்ரீநகரில் தற்போது முகாமிட்டுள்ள அமித்ஷா, அங்கு பாதுகாப்புத் துறையினருடன் அவசர ஆலோசனைகளை நடத்தினார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமது சவூதி அரேபிய பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திருபுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில்,"ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கொடூர செயலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்... அவர்கள் தப்ப முடியாது! அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது தீர்மானம் அசைக்க முடியாதது, அது மேலும் வலுவடையும் என பதிவிட்டிருந்தார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்
சவூதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் பிரதமர் மோடி டெல்லியில் புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய பதிலடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications