எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. சத்தமின்றி இந்திய ராணுவம் செய்த தரமான சம்பவம்.! சபாஷ்
ஜெயப்பூர்: இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவரை எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடியாகக் கைது செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உளவு பார்க்கும் முயற்சியாக அந்த பாகிஸ்தான் ரேஞ்சர் இந்தியாவில் ஊடுருவ முயன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் தீவிரவாதிகள் மிகப் பெரிய நாசவேலையில் ஈடுபட்டனர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசித்து வந்த சுற்றுலாப் பயணிகள் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை
இந்தத் தாக்குதலால் எல்லையில் இப்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா தக்கப் பதிலடி தர வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஊடுருவ முயற்சி
ராஜஸ்தானில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரேஞ்சர் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். இதைச் சரியாகக் கவனித்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி அவரை கைது செய்தார். உளவு பார்க்கும் நோக்கத்துடன் அந்த ரேஞ்சர் இந்தியாவில் ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய ராணுவம் அதிரடி
பாகிஸ்தானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த அந்த நபர் முகமது ஹுசைன் என்ற ரேஞ்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பஹாவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்போது ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பிஎஸ்எஃப் படையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.. அவர் எதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் ரேஞ்சர் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் ரேஞ்சர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில் உள்ள சர்வதேச எல்லையில் நமது பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷா தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அவரை விடுவிக்க இந்தியா வலியுறுத்திய போதிலும் பாகிஸ்தான் விடுவிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அடுத்தடுத்த இருவர் இந்தியாவில் ஊடுருவ முயன்றதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியாவில் பறக்க அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே இப்படிப் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பல நாட்கள் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்கப் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications