பாகிஸ்தான் ராணுவ தளபதியை ராஜினாமா செய்ய கூறிய.. ராணுவ அதிகாரி மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை!
கராச்சி : பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை ராஜினாமா செய்யுமாறு கூறியதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் மகனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்து வருபவர் கமர் ஜாவேத் பஜ்வா. இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓராண்டு பதவி நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேசத்துரோக வழக்கு பாய்ந்தது
மேஜர் ஜெனரல் (ஆர்) ஜாபர் மெஹ்தி அஸ்காரியின் மகன் ஹசன் அஸ்காரி கடுமையாக எதிர்த்தார். ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு செய்யக்கூடாது என்றும் தி கமர் ஜாவேத் பஜ்வா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஹசன் அஸ்காரி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் ஹசன் அஸ்காரி மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது.

உயர்பாதுகாப்பு சிறை
இதனை தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சாஹிவாலில் உள்ள உயர்பாதுகாப்பு சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயர்பாதுகாப்பு சிறையில் இருக்கும் தனது மகனைச் சந்திப்பதில் சிரமம் இருப்பதாக தந்தை புகார் அளித்திருந்தார்.

விசாரணை நடத்த முடியுமா?
ஒரு சிவிலியன் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் இது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில் ஹசன் அஸ்காரி மீது நடத்தப்படும் விசாரணையை கேமராவில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் சிறை
ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை அவமதித்து தேசத்துரோகம் செய்து விட்டதாக கூறிய ராணுவ நீதிமன்றம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் மகனான ஹசன் அஸ்காரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications