ரூ.50,000 அபராதம், 5 செருப்படி... இது பாலியல் குற்றவாளிகளுக்கு ஹரியானா ‘நாட்டாமை’யின் தீர்ப்பு!
சண்டிகர்: ஹரியானாவில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும், 5 செருப்படியும் தண்டனையாக விதித்து பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர். இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஜாகோப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், கடந்த மாதம் 12-ந் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த முன்பத் - ஜப்பீத் என்ற சகோதரர்கள் அச்சிறுமியை மாறி, மாறி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால், கொலை செய்து விடுவதாகவும் அச்சிறுமியை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
எனினும் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் அப்பெண். இதனையடுத்து இந்த விவகாரம் ஊர்ப் பஞ்சாயத்திற்கு சென்றது. அங்கு பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதாவது, சகோதரர்கள் இருவரும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், பொதுமக்கள் முன்னிலையில் ஐந்து செருப்படி பெற வேண்டும் என்பது தான் அது.
பஞ்சாயத்தாரின் இத்தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அச்சிறுமியின் பெற்றோர், நீதி வேண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பலாத்காரம் செய்த இரண்டு சகோதரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி சுமித்ரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications