தோல்வி பயம்: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் போட்டியில்லை?- ராஜ்யசபா உறுப்பினராகிறார்!
டெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடமாட்டார். அவருக்குப் பதிலாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. .
1984 தொடங்கி இதுவரை எட்டு முறை சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம் ஏழுமுறை வெற்றி பெற்றுள்ளார். கிட்டத்தட்ட 22 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அதிகாரம் கொண்ட இலாக்காக்களில் இருந்திருக்கிறார்.

கடந்த முறை நூலிழை வெற்ற
ப.சிதம்பரத்துக்கு கடந்த தேர்தலில் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டன. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக உறுப்பினர் ராஜ. கண்ணப்பனிடம் தோல்வியை தொட்டு பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்.

குறைந்து போன வாக்குகள்
ஒரு காலத்தில் ரெண்டரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவருக்கு கடந்தமுறை வெறும் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் இழுபறி வெற்றியைக் கொடுத்தது

தொகுதிக்கு என்ன பலன்
7 முறை வெற்றி பெற வைத்த மக்களுக்கு இதுவரை பெரிய அளவில் நன்மைகளை செய்யவில்லை என்றாலும், பின்தங்கிய சிவகங்கைக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றால் அது சிதம்பரத்தால்தான் என்கின்றனர் காங்கிரசார்.

சிவகங்கை தொகுதியில்...
"இனிமேல் என்னால் தேர்தலில் ஓட்டுக் கேட்டு போக முடியாது. இதுதான் கடைசித் தேர்தல்" என காங்கிரஸாரிடம் சிதம்பரம் கூறி வருகிறாராம். ஆனாலும் கடந்த ஒரு ஆண்டுகளாகவே தொகுதியில் நடைபெறும் வங்கிக்கிளைகள், எ.டி.எம் மையங்கள் திறப்பு விழா, கல்விக்கடன் விழா என வங்கி தொடர்பான விழாக்களில் பங்கேற்று வருகிறார்.

போட்டியிடப் போவதில்லை
தொகுதிக்குள் வலம் வந்தாலும் இந்த முறை சிதம்பரம் போட்டியிடும் மன நிலையில் இல்லை என்பதுதான் முக்கியச் செய்தி. தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் போட்டியிட வைத்துவிட வேண்டும் என நினைக்கிறார் சிதம்பரம்.

திமுக விரும்பும் ப.சி
"திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருக்கவேண்டும் என சிதம்பரம் விரும்புகிறார். இன்னும்கூட அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

தோல்வி பயம்
கூட்டணி இன்றி தனியாக போட்டியிட்டால் தோற்பது உறுதி என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவேதான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல், மத்திய அமைச்சர் சரத்பவாரைப் போல கொல்லைப்புறத்தை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓட்டுக் கேட்கப் போவாரா?
அண்மையில் சிவகங்கையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், ‘'பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை. அது மாற்றத்துக்கு அப்பாற்பட்டது'' என்று பேசினார் சிதம்பரம். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு தொண்டர், ‘'அப்போ.. நீங்க'' என்று கேட்க, ''நானும்தான்.. நானும்தான்..'' என அழுத்தமாகச் சொன்னார் சிதம்பரம்.

ராஜ்யசபா உறுப்பினர்
எனவே, இப்போதுள்ள அரசியல் சூழலில் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டி யிடுவது சாத்தியமில்லை'' என்று சொல்கிறார்கள். எனவே சிதம்பரத்தை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ் தலைமை.

இந்தியா முழுவதும் பிரச்சாரம்
பிரதமர் கனவில் இருக்கும் சிதம்பரமோ, 'இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்கிறேன், தேர்தலுக்கான நிதி ஆதாரத்தை திரட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்' என்று தலைமையிடம் வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications