பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கு ஒரு போதும் பாதிப்பு வராது - மோடி உறுதி
டெல்லி: பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் தேசிய நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மோடி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இடஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும் பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாக பொய்யான தகவல்களை எதிர்ககட்சிகள் பரப்பி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமரமாக இருந்தபோதும், பாஜக அரசு இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யப்போவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. பாஜக மத்தியில் மட்டுமல்லாது மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ஆனால், ஒருபோதும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நினைத்ததில்லை.
இடஒதுக்கீடு என்பது தலித்துகளின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, இடஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அம்பேத்கார் விளங்கியதாகவும், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றமே அவரின் லட்சியமாக இருந்ததாகவும் மோடி புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் மிகப்பெரிய வளம், எரிசக்தித் துறை, இன்னும் பல துறைகளில் அவர் விரிந்து பரந்த லட்சியப் பார்வை கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதையே அவர் எப்போதும் விரும்பினார். கல்வியை நாடி அறிவை வளர்த்துக்குக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு சக்தியை மக்களிடம் உருவாக்கினார் அம்பேத்கர்.
நாட்டில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விவகாரம் முன்னெடுக்கப்பட்ட போது, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை எனில், தான் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறியவர் அம்பேத்கர் என்று மோடி பேசினார்.


Click it and Unblock the Notifications
