For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் நரேந்திர மோதி : சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவும் 'குவாட்'

By BBC News தமிழ்
|
PM Modi US visit: How QUAD summit may tackle China
Getty Images
PM Modi US visit: How QUAD summit may tackle China

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது.

குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும்.

இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை ஆசிய நாடுகளுக்கு வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய உடன்பாடு தொடர்பான தீவிரமான விவாதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், குவாட் குழு மீண்டும் ஒரு சந்திப்பை வாஷிங்டனில் நடத்துகிறது.

ஆக்கஸ் உடன்பாடு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தானது. பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், நீர்மூழ்கித் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வது இந்த உடன்பாட்டின் சிறப்பம்சம். இந்த உடன்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகள் கிடைக்கும்.

இந்த உடன்பாடு ஏற்கெனவே இருக்கும் குவாட் ஒத்துழைப்பை எந்த வகையில் பாதிக்கும்?

இந்த இரண்டுமே சீனாவைக் குறிவைத்து உருவாக்கப்பட்டவை என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்காகவே இந்த உடன்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் இவற்றில் பங்கேற்றிருக்கும் தலைவர்களோ, அரசோ சீனாவைப் பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குவாட்டில் அங்கம் வகிக்கும் பிற தலைவர்களைச் சந்திக்கும்போது, நிச்சயமாக சீனாவைப் பற்றி தன் மனதில் வைத்திருப்பார். குவாட் ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, சீனாவுடன் எல்லையப் பகிர்ந்து கொள்ளும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. எல்லைப் பிரச்னையால் இரு நாடுகளுக்கும் கசப்புணர்வு இருக்கிறது. அண்மைக் காலங்களில் இவ்விரு நாடுகளும் எல்லையின் பல பகுதிகளில் மோதிக் கொண்டிருக்கின்றன.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி
Getty Images
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பலதரப்பு சர்வதேச மன்றங்களில் தீவிரமாகப் பங்கெடுத்து வருகிறது. இவற்றில் சீனா அங்கம் வகிக்கும் மன்றங்களும் உண்டு. ஆக்கஸ், குவாட் ஆகிய இரு உடன்பாடுகளுமே இந்தியாவுக்கு ஆதாயம் அளிக்கக்கூடியவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவது போன்ற தங்களது கூட்டு நலனுக்கு ஓர் உலகளாவிய பார்வையை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதற்கு குவாட் சந்திப்பு இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கும் என்று கூறுகிறார் உத்திசார் நிபுணர் பிரத்யூஷ் ராவ்.

"ஆக்கஸ் மற்றும் குவாட் ஆகியவை ஒன்றையொன்று பூர்த்தி செய்து கொள்ளக்கூடியவை" என்றும் அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம், சைபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 5 ஜி உள்கட்டமைப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆழமான ஒத்துழைப்பு குறித்து குவாட் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

"ஒன்றிணைந்து கோவிட் தடுப்பூசிகளை தயாரித்து விநியோகிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்க முடியும் என்பதை ஏற்கெனவே குவாட் குழு காட்டியிருக்கிறது" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் மைய சிந்தனைக் குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன்.

"இத்தகைய முடிவுகள் சீனாவுக்கு எரிச்சலூட்டக் கூடியவை அல்ல என்பதால் அது இந்தியாவுக்கு வசதியாக இருக்கும்" என்கிறார் குகல்மேன்.

ஆயினும் குவாட் அமைப்புக்குள் பல ஆழமான சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு இருக்கும் தனிப்பட்ட சவால்களும், சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் எல்லை மோதல்களும் அவற்றுள் முக்கியமானவை.

தடுப்பூசி
Getty Images
தடுப்பூசி

பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதியில் சீனா செய்துவரும் முதலீடுகளால் ஏற்கெனவே இந்தியா அதிருப்தியில் இருக்கிறது. இப்போது ஆப்கானிஸ்தானிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இந்தியாவின் கவலை அதிகரித்திருக்கிறது.

இவற்றில் குவாட் ஒத்துழைப்பில் இருக்கும் பிற நாடுகள் இந்தியாவுக்கு எந்த அளவில் உதவி செய்ய முடியும்?

"இந்தியா தனது கடல் நலன்களைப் பாதுகாப்பதில் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும்" என்கிறார் இந்தியாவின் முன்னாள் ராஜீய அதிகாரி ஜிதேந்திர மிஸ்ரா.

"பல ஆண்டுகளாக சீனா தனது இருப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கும் பரந்த கடல்சார்ந்த பகுதிகளில் இந்தியா தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள குவாட் குழு எப்படி உதவ முடியும் என்பது குறித்து இந்தியா கேட்க வேண்டும்" என்கிறார் மிஸ்ரா.

குவாட் உச்சிமாநாடு மாத்திரமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

ஆயினும் பைடனும் மோதியும் சீனாவைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக் கொள்வதற்கு வாய்ப்பில்லை. இந்தோ - பசிபிக் பிராந்தியம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிக்க வாயப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களை நடத்த விடாமல் தலிபான்களைத் தடுப்பது குறித்து இந்தியா அமெரிக்காவிடம் உறுதி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபன்களுடன் எப்படிப்பட்ட உறவை ஏற்படுத்திக்க கொள்வது என்பது தொடர்பாக பல நாடுகள் இன்னும் குழப்பத்திலேயே இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பிரத்யேகமான கொள்கையை உருவாக்குவதால் அதை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும்.

ஆயினும் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது போன்ற கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

இந்த இருதரப்பு சந்திப்பு அத்தகைய பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளை அளிக்காமல் போகலாம். ஆனால் ஏற்கெனவே இருக்கும் சிக்கல்களைத் தாண்டி புதிய வழிமுறைகளை உருவாக்க பைடனுக்கும் மோதிக்கும் வாய்ப்புகளை வழங்கும்.

"மாசை ஏற்படுத்தாத தொழில்நுட்பங்களில் கூட்டு முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் இருக்கும் வலுவான ஒத்துழைப்பை தக்கவைத்துக்கொள்வது பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள்," என்கிறார் ராவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
PM Modi US visit: How QUAD summit may tackle China
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X