நம் ராணுவ கண்காட்சியை கண்டு "சில" நாடுகள் அச்சத்தில் நெளிகின்றன.. பிரதமர் மோடி பேச்சு
காந்திநகர்: குஜராத்தில் பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்படும் மாபெரும் ராணுவக் கண்காட்சியானது சில உலக நாடுகளை அசவுகர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
குஜராத்துக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைத்து இவ்வாறு பேசினார்.
இந்தக் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர், குஜராத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

பரபரக்கும் குஜராத்
குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனினும், இதற்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலை பாஜக தீவிரமாக அணுகி வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, 2024 மக்களவைத் தேர்தலுக்கு குஜராத் தேர்தல் ஒரு முன்னோட்டமாக கருதப்படுகிறது என்பதுதான். அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தலில் தப்பித்தவறி தோல்வி அடைந்தாலும் கூட, அது மக்களவைத் தேர்தல் முடிவை வெகுவாக பாதித்துவிடும். இரண்டாவது காரணம், இதுவரை குஜராத்தில் பெரிய அளவில் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் இருக்கவில்லை. ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சி அங்கு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இது பாஜகவுக்கு ஒருவித அச்சத்தை கொடுத்திருக்கிறது.

மோடி வருகை
இதனால் இந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக கடுமையாக உழைத்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு மக்களை கவர்வதற்காக பல இலவச திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு குஜராத் தலைநகர் காந்தி நகருக்கு மோடி வந்தார். அவருக்கு பாஜகவினரும், அமைச்சர்கள் - எம்எல்ஏக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராணுவக் கண்காட்சி தொடங்கி வைப்பு
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள ராணுவக் கண்காட்சியை மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: முழுக்க முழுக்க இந்தியாவில் உற்பத்தி செய்ப்படட ராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வைத்து இந்தக் கண்காட்சி நடத்தப்படுவது உண்மையிலேயே பெருமை அளிப்பதாக உள்ளது. இது எனக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு இந்தியரும் பெருமிதத்துடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்க வேண்டிய தருணம் ஆகும்.

தவிர்க்க முடியாத சக்தி
8 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் நிலைமை எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். எந்த நாட்டிடம் ஆயுதங்களை கேட்பது; யாரிடம் எத்தனை ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வது என நாம் யோசித்துக் கொண்டிருந்தார். ஆனால், இன்று இந்தியாவிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய உலக நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 70 நாடுகளுக்கு நாம் ஆயுதங்களையும், ராணுவத் தளவாடங்களையும் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். இன்று ராணுவத் தளவாட ஏற்றுமதியில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

'அசவுகர்யத்தில் நெளிகின்றன'
இந்தியா நடத்தும் இந்த ராணுவக் கண்காட்சியை பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்து வருகிறது. அதே சமயத்தில், சில நாடுகள் நமது ராணுவக் கண்காட்சியை பார்த்து அசவுகர்யத்தில் நெளிந்துக் கொண்டிருக்கும். அது சகஜமானது தான். இந்த வளர்ச்சி போதும் என நாம் நினைத்துவிடக் கூடாது. இதுதான் ஆரம்பம் என நினைத்து இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியா தான் முதன்மையான நாடு எனக் கூறும் அளவுக்கு நாம் இன்னும் வளர வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications