ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்.. வெற்றி வியூகம் வகுத்த பாஜக! செப்.14ல் மோடி களமிறங்குகிறார்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வெற்றிக்காக பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி செப்.14ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பில், தேர்தல் ரிசல்ட், ஒரு லோடு மண் அள்ளி போட்டுவிட்டது. இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியது. அதேபோல மாநில அந்தஸ்து குறித்த விவாதங்களும் தீவிரமடைந்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றன. கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அம்மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
தேர்தல் குறித்து என்ன வலியுறுத்தினாலும், அசைந்து கொடுக்காமல் இருந்த மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு போட்டது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே வேறு வழியின்றி மத்திய அரசு தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கிறது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகியது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகியது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
தேர்தலில் பாஜக தனது வெற்றியை உறுதி செய்ய பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரசாரத்திற்கு பிரதமர் மோடியை களமிறக்குகிறது. நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்னர் அமித்ஷாவும் பிரசாரம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, செப்.14ம் தேதி மோடி இங்கு பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக பாஜக ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதில் 25 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. குறிப்பாக முதியோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை மும்மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்றும், ஆயுஷ்மான் பாரத் சேஹத் திட்டத்தின் கீழ் சுகாதார சேவையை விரிவுபடுத்தப்படும் என்றும் பாஜக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications