
கனல் கண்ணன்: பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; வழக்கு பதிவு - நடந்தது என்ன?
திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்து முன்னணி அமைப்பு கடந்த ஒரு மாதமாக 'இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம்' என்ற தொடர் பிரசாரத்தை நடத்தி வருகிறது. இந்தப் பிரசார பயணம் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னை மதுரவாயலில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, "ஸ்ரீ ரங்கநாதனைக் கும்பிட ஒரு லட்சம் பேர் சாமி கும்பிட்டுவிட்டு வருகிறார்கள். அங்கே எதிரே இருக்கின்ற ஒரு சிலை, கடவுளே இல்லை என்று சொன்னவருடைய சிலை. அது என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்," என்று பேசினார்.
அவருடைய இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது. இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
- 'வெள்ள ஜிஹாத்' - அசாம் வெள்ளத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணமா?
- புதுச்சேரி தியாகச்சுவரில் 'சாவர்க்கர்' பெயர்: வலுக்கும் எதிர்ப்பு - விட்டுக்கொடுக்காத ஆளுநர்
அந்தப் புகாரின் அடிப்படையில் 153, 505/1b (கலகம் செய்யத் தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கனல் கண்ணனின் இந்தப் பேச்சுக்கு, அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கண்டனம் தெரிவித்திருந்தார். பெரியாரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பவர்களையோ, அவருடைய சிலையை சேதப்படுத்த நினைப்பவர்களையோ தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
'சிலையை இடிக்க இயலாது'
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தந்தை பெரியார் திராவிட கழக பிரசார செயலாளர் சீ.விடுதலை அரசு, "அடிக்கடி சன்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் இது போன்று மக்களிடம் ஒரு பதற்றத்தை உண்டாக்கும் நோக்கில் பேசுவார்கள். அதுபோல் தான் இதுவும். இந்த சிலையை இடிக்க வேண்டும் என்றால் கூலிப்படை மூலம் இரவோடு இரவாக வந்து இடித்தால் மட்டுமே முடியும். நாள் தேதி குறித்து இவர்களால் இடிக்க முடியாது.
ஏனென்றால் இதே போன்று முன்பு ஒருமுறை சிலை இடிக்கபட்டது. இந்த சிலையை நிறுவுதற்காக மறைப்புகள் வைத்திருந்த போது 2006 டிசம்பர் மாதம் 6ம் தேதி அன்று போலீசார் அயர்ந்த நேரத்தில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு சட்டை அணிந்து சிலையை உடைத்தனர்.
1976ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் கோவில் கோபுரத்தில் இருந்து 100 அடி தூரத்தில் பெரியார் சிலை அமைக்க திராவிட கழகம் முடிவு செய்து, அரசு அனுமதி அளித்தும், 30 ஆண்டுகள் கழித்து தான் அங்கே சிலை வைக்கபட்டது.
சிலையை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டது. இதனையடுத்து திறப்பு விழா நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு 4 பேர் அதிகாலை சுத்தியலால் உடைத்ததால் சிலையின் கழுத்து பகுதி துண்டானது.
அதன்பின்னர் புதிதாக வெண்கல சிலை அதே இடத்தில் டிசம்பர் 16ம் தேதி திறக்கப்படும் என திராவிடர் கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியானது.
70களில் மொட்டை கோபுரத்துடன் ஸ்ரீரங்கம் இந்த அளவிற்கு பரபரப்பாக இருக்காது. ராஜகோபுரம் கட்டிய பிறகு தான் இவ்வளவு பரபரப்பாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி கோவில் அருகே பெரியார் சிலை இருக்கிறது என அனைவரும் பேசி வருகின்றனர். ஸ்ரீரங்கம் முழுவதும் மதில் சுவர்களால் சூழபட்டுள்ளது. ரெங்கா ரெங்கா கோபுரத்தில் இருந்து தான் கோவில் என்பதே ஆரம்பம். எனவே கோவிலின் அருகே சிலை உள்ளது என்பது தவறானது," என கூறினார்.
பெரியார் சிலையை வைத்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் மீண்டும் இவர்களை போன்றவர்கள் தான் சிலை மற்றும் கருப்பு சட்டைக்காரர்கள் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். உள்ளுரில் நாங்கள், அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றோம். வெளியே இருந்து கருத்து தெரிவிப்பவர்களால் தான் சங்கடம் ஏற்படுகிறது," என தெரிவித்தார்.
இந்து முன்னணி சொல்வது என்ன?
சினிமா நடிகர் கனல்கண்ணன் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய இந்து முன்னணி கோட்ட செயலாளர் மா. போஜராஜன், "எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான் ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரம் ராஜகோபுரமாக கட்டப்பட்டது. இந்து மக்கள் அனைவரும் பூலோகத்தின் வைகுண்டமாக ஸ்ரீரங்கத்தை போற்றி வழிபட்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் என்பது புனித ஸ்தலம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு தான் கற்பகிரகம் இருக்கும் பகுதி மட்டுமே கோவில். கோவில் என்றால் கற்பகிரகத்தை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்துமே கோவில் தான்.
ஸ்ரீரகத்தின் ராஜகோபுரத்தில் இருந்து 300 அடி தூரத்தில் தான் பெரியார் சிலை உள்ளது. இதுவே பள்ளிவாசல் அல்லது தேவாலயத்தின் முன்பு 400 அல்லது 500 அடி தூரத்தில் பெரியாரின் சிலையை அவர்களால் வைக்க முடிந்தால் இந்த சிலை இங்கேயே இருக்கட்டும்," என தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=aBFJQhL_XW4&t=179s
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: