திருப்பதியில் யூடியூபர் பார்த்த வேலையால் அதிர்ந்துபோன அதிகாரிகள்..தட்டித்தூக்கிய விஜிலென்ஸ் ஊழியர்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன் பறக்கவிட்ட நபரை திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பிடிபட்ட யூடியூபரிடம் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி திருமலையில் டிரோன் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில் நேற்று மாலையில் திடீரென டிரோன் ஒன்று பறந்துள்ளது. டிரோன் பறப்பதைப் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் டிரோன் பறக்கவிட்டுக் கொண்டிருந்த நபரைப் பிடித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராஜஸ்தானை சேர்ந்த அன்ஷுமன் தரேஜா என்பது தெரியவந்தது. யூடியூபரான இவர் ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள ஹரிநாம சங்கீர்த்தனை மண்டபத்தில் இருந்து டிரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருமலை போலீசார் யூடியூபரான அன்ஷுமன் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கிறார்கள். திருப்பதியில் எப்போதும் கூட்டம் காணப்படும்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கோடிக்கணக்கிலான பணம், தங்க நாணயம், வெளிநாட்டு கரன்சிகள், வெள்ளி, தங்கக் கட்டிகளை பக்தர்கள் சுவாமிக்கு காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் டிரோன் பறப்பதற்கான தடை. இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் டிரோனை பறக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருட சேவை ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டுக்கான கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதன்படி, மே 12 ஆம் தேதி, ஜூலை 10 ஆம் தேதி, ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, அக்டோபர் மாதம் 7- ஆம் தேதி, நவம்பர் மாதம் 5 ஆம் தேதிகளில் பெளர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜூன் மாதம் 11 ஆம் தேதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம், செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கார்த்திகை தீபம் ஆகியவை நடைபெறுவதால் இந்த பெளர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications