"கிறிஸ்மஸ் தாத்தா!" மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ரோஜா தந்த சர்ப்ரைஸ்! அடுத்து நடந்த செம சம்பவம்
விசாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளி ஒருவரது குடும்பத்திற்குக் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டுச் சென்று அமைச்சர் ரோஜா உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சினிமா மூலம் நடிகர், நடிகைகளுக்கு எளிமையாகப் புகழ் வெளிச்சம் கிடைக்கும். அந்த பெயரையும் புகழையும் வைத்து அரசியலிலும் சாதிக்க முயல்வார்கள். ஆனால், அனைத்து சினிமா பிரபலங்களாலும் அரசியலில் சாதிக்க முடியாது.

அரசியலில் சாதித்த சினிமா பிரபலங்கள் என்றால் அதை நாம் விரல் விட்டே எண்ணிவிடலாம். அப்படி சினிமா அரசியல் என இரண்டிலும் சாதித்த நபர் என்றால் அது ரோஜா. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் கலக்கியவர், இப்போது ஆந்திர அமைச்சராக இருக்கிறார்.
கிறிஸ்துமஸ் தாத்தா: இதற்கிடையே ஆந்திர அமைச்சராக உள்ள ரோஜா, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. நடிகையாகத் தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் கலக்கி, அதன் பிறகு ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பியவர் ரோஜா. அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ள இவர் இப்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜெகன் பிறந்த நாளன்று மக்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொள்வதை நடிகை ரோஜா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். கடந்தாண்டு கூட அவர் எம்பிபிஎஸ் படித்து வந்த பெண்ணுக்கு உதவியிருந்தார். மேலும், தனது சொந்த தொகுதியான நகரியில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்தார். அந்த வரிசையில் இந்தாண்டு அவர் செய்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மாற்றுத்திறனாளி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகராஜ். இவர் அங்கே சாலையோரம் செருப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவருக்குத் திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி கெஜியாவோவுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்த நிலையில், அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர்களின் நிரந்தர வருமானம் என்றால் அது அரசு அளிக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் தான்.. இதை வைத்து நாகராஜ் தனது இரு மகள்களையும் படிக்க வைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதற்கிடையே நாகராஜ் குடும்பம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவிய நிலையில், அதில் அமைச்சர் ரோஜாவை சிலர் உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். ஜெகன் பிறந்த நாளன்று அந்த குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்க ரோஜா முடிவு செய்தார். அதன்படி சான்டா தாத்தா வேடமிட்டு விஜயவாடா வம்பே காலணியில் உள்ள நாகராஜனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இன்ப அதிர்ச்சி: கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நாகராஜ், தனது வீட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்துள்ளதைக் கண்டு உற்சாகம் அடைந்தார். ஆனால், உண்மையான அதிர்ச்சி அதன் பின்னரே அவருக்கு ஏற்பட்டது.. அமைச்சர் ரோஜா தான் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்தவுடன் அவர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதையடுத்து அமைச்சர் ரோஜா, நாகராஜுன் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
மேலும் குழந்தைகளின் கல்விக்காக ரூ.2 லட்சம் காசோலையையும் வழங்கினார். ரோஜாவின் திடீர் வருகையால் நாகராஜ் குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்.
பாராட்டு: மாற்றுத்திறனாளியான நாகராஜின் துன்பத்தை உணர்ந்து அவருக்கு உதவிய அமைச்சர் ரோஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவும் நிலையில், அதிலும் பலரும் ரோஜாவை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications