மக்கள் புரட்சிக்கு மகத்தான வெற்றி! தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்!
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார்.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடைகள் அகன்றுள்ளன.
தமிழகத்தில் 2014ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாள நிகழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இத்தடையை உடைத்து ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள் வரலாறு காணாத புரட்சியில் குதித்தனர்.
அலங்காநல்லூரில் மையம் கொண்ட இந்த புரட்சி தீ சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, சேலம் என பல நகரங்களிலும் பெருநெருப்பாய் பரவியது. ஒருவார காலம் நீடித்த இப்புரட்சியின் விளைவாக டெல்லிக்கு விரைந்தார் முதல்வர் பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி மத்திய அரசு கை விரித்தது. அதே நேரத்தில் தமிழக அரசு இது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் எனவும் மத்திய அரசு உறுதி அளித்தது.

அவசர சட்டம்
இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்திருந்தார்.

நிரந்தர சட்டத்துக்கு மசோதா
ஆனால் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள், நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான சட்டம் தேவை என தொடர்ந்து போராடினர். இதனால் மரபுகளுக்கு மாறாக ஆண்டின் முதல் கூட்டத்தின் முதல் நாள் மாலையிலேயே தமிழக சட்டசபை நிரந்தர சட்டத்துக்கான மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

விதிவிலக்கு
அதாவது மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழகத்துக்கு விதி விலக்கு அளித்து தமிழக அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது. இம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய அரசு ஒப்புதல்
மத்திய அரசின் சட்டத்துறை, கலாசாரத்துறை, சுற்றுச் சுழல் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் 2 நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்திருந்தன. இதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் இம்மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதியும் ஒப்புதல்
இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தமிழக சட்டசபையின் மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்காக இருந்த அனைத்து முட்டுக்கட்டுகளும் அகற்றப்பட்டன.

கெஜட்டில் வெளியீடு
ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ள இந்த சட்டம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் தமிழக அரசு இதை கெஜட்டில் வெளியிடும்.
இதனிடையே தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு எதிரான கியூப்பா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வாராய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications