உபி தேர்தல்:நள்ளிரவில் பரபரத்த வாரணாசி.. நேரடியாக களத்தில் இறங்கிய பிரதமர் & முதல்வர்.. திடீர் ஆய்வு
வாரணாசி: பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் நேற்றிரவு அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். . அத்துடன் நிற்காமல் நள்ளிரவு நேரத்தில் காசியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான காலிறுதியாகக் கூட இதை சில தேர்தல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட ஏற்கனவே கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர்.

பிரதமர் மோடி
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களில் மட்டும் பல முறை உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று, பல முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்துவருகிறார். நேற்றைய தினம் 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட பல புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்.

புனித நீராடிய மோடி
நேற்று காலை கங்கையில் புனித நீராடிய பிரதமர் மோடி, கோவிலிலும் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். இது தொடர்பான ஃபோட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. மேலும், இந்த கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் மீது மலர் தூவி மரியாதையும் அவர் செலுத்தினார்.

முதல்வர்களுடன் ஆலோசனை
இதன் பின்னர் நேற்று இரவு பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். நள்ளிரவு வரை நீண்ட இந்த ஆலோசனையில் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில், பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. எனவே, தேர்தலில் வியூகங்கள் குறித்து பிரதமர் மோடி மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வாரணாசியை ஆய்வு செய்த பிரதமர்
அத்துடன் நிற்காமல் நள்ளிரவு நேரத்தில் காசியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும், நள்ளிரவு 1 மணியளவில் வாரணாசி ரயில் நிலையத்தையும் பிரதமர் மோடி மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தனர். இது தொடர்பானப் புகைப்படங்களையும் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இவை அனைத்தும் வைரலாகி பரவி வருகிறது.

உத்தரப் பிரதேச தேர்தல்
கடந்த 2017இல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வென்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக்கப்பட்டார். அதேபோல அடுத்து 2024 மக்களவை தேர்தலிலும் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவின் டாப் குறியாக உள்ளது. எனவே, மக்களவை தேர்தலையும் உபியில் ஆளும் கட்சியாக இருந்து எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது தொடர்பாக யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க பாஜக தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications