ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி- பரிந்துரைத்த காங்கிரஸ்!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது லோக்சபா. இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம் பெறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளரான வயநாடு எம்பி பிரியங்கா காந்தியின் பெயரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, லோக்சபாவில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தது. அப்போது, இந்தியாவில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது புதிய யோசனை அல்ல. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் 1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான முதல் பொதுத் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டில் ஒன்றாக நடத்தப்பட்டது. இந்த நடைமுறை 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்தது என தெரிவிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

மத்திய அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கடுமையாக தொடக்க நிலையிலேயே எதிர்த்தன. இந்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன. இந்த மசோதா நாட்டின் அடிப்படை அரசியல் கட்டமைப்புக்கு எதிரானது; அரசியல் சாசனத்துக்கு எதிரானது; நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது; எதிர்காலத்தில் மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இல்லாத நிலைமையை உருவாக்கும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும் திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில், 3-ல் 2 பங்கு பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் இப்படியான ஒரு மசோதாவை சபாநாயகர் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இம்மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப பிரதமர் மோடி விரும்புகிறார் என்றார். இதனையடுத்து கூட்டுக் குழுவுக்கு அனுப்புவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் சில எம்பிக்கள் முன்பாக வைக்கப்பட்ட இந்த இயந்திரம் பழுதானது நகைப்புக்குரியதானது. இறுதியில் 269 எம்பிக்கள், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப ஆதரவு தெரிவித்தனர். இதனால் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தி இடம் பெறுவார் என காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications