சீட் ஷேரிங் ஓவர்.. முழு வேகத்தில் இறங்கும் காங்கிரஸ்.. யாத்திரையில் அண்ணனோடு இணையும் பிரியங்கா!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்று நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார்.
எதிர் வரும் லோக்சபா தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமானதாகும். ஆட்சியில் இல்லாத கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கட்சியை விட்டு விலகினர். அதில் சிலர் பாஜகவில் ஐக்கியமாகினர். பஞ்சாப் தொடங்கி பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை எப்படியாவது கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தற்போது யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசமும், பீகாரும் முக்கியமானவை. இரண்டு மாநிலங்களிலும் மொத்தம் 120 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. இந்த 120 தொகுதிகளில் பாஜகவை 20-30க்குள் சுருக்க வேண்டும். அப்படி சுருக்கினால்தான் பாஜக தேசிய அளவில் 200-250 எண்ணிக்கையில் நிற்பார்கள். ஆக இந்தியா கூட்டணி மிக மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய மாநிலம் உத்தரப் பிரதேசம்தான்.
இந்த மாநிலத்தில் சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு முதல் முறையாக உத்தரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. தொகுதி பங்கீட்டின்படி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் களம் இறங்குகிறது. அமேதி, ரேபரேலி, வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு பெற்றிருக்கிறது. 20+ தொகுதிகளில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17 தொகுதிகளோடு காங்கிரஸ் சுருங்கிக்கொண்டது.
இந்நிலையில், ராகுலின் யாத்திரையில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்கிறார். கடந்த 16ம் தேதி உ.பியில் யாத்திரை நுழைந்தது. அப்போதே பிரியங்கா காந்தி இதில் பங்கேற்க இருப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இன்று மொராதாபாத்தில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி யாத்திரையில் பங்கேற்கிறார். மொராதாபாத்தில் இருந்து அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ், ஆக்ரா வழியாக ஃபதேபூர் சிக்ரியில் யாத்திரை முடிவடைகிறது.
இம்மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 48% பேர் இஸ்லாமியர்கள் என்பதால் யாத்திரை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய யாத்திரையை தொடர்ந்து நாளைய யாத்திரையில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications