ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7,000.. ‘கட்டிப்பிடி’ வைத்தியத்தையே தொழிலாக மாற்றிய இளைஞர்!
தொழில்முறை அரவணைப்பாளராக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7 ஆயிரம் கட்டணம் வசூலித்து வருகிறார் இளைஞர் ஒருவர்.
ஒட்டாவா: கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கட்டிப்பிடித்தலையே தொழிலாகச் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7 ஆயிரம் வருமானம் ஈட்டி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. சமீபகாலமாக மக்கள் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றிற்கான சாதாரண தீர்வுகளைக்கூட தொழிலாக மாற்ற ஆரம்பித்து விட்டனர் சிலர். ரூம் போட்டு அழுவது, சவப்பெட்டிக்குள் படுத்துக் கொள்வது என வித்தியாச வித்தியாசமான தொழில்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்கென உள்ளன.
இந்தப் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்திருப்பதுதான் Professional Cuddler பணி. தமிழில் புரிகிற மாதிரி சொல்வதென்றால், வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவது போன்ற கட்டிப்புடி வைத்தியம்.

கட்டிப்பிடி வைத்தியம்
ஏற்கனவே பல நாடுகளில் கட்டிப்பிடி வைத்தியம் புழக்கத்தில்தான் உள்ளது. மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பதை அறிந்தோ, அறியாமலோ மக்கள், தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, ஆறுதல் கூறுவது போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இதையே தற்போது தொழிலாக மாற்றி விட்டார் ஒரு இளைஞர்.

கட்டிப்புடி சிகிச்சை
கனடாவைச் சேர்ந்த 30 வயது இளைஞரான ட்ரெவர் ஹூடன் என்பவர் தான் இந்தக் கட்டிப்பிடி சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். எம்பிராஸ் கனெக்ஷன் என்பது அவரது நிறுவனத்தில் பெயர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், கட்டிப்புடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ்கள் வழங்கப்படுகிறது.

தொழில்முறை அரவணைப்பாளர்
தொழில்முறை அரவணைப்பாளர் என தன்னை சமூகவலைதளங்களில் குறிப்பிடும் ட்ரெவர், தன்னுடைய ஒரு மணி நேரப் பணிக்கு 75 பவுண்ட் கட்டணம் வசூலிக்கிறார். இந்திய மதிப்பில் இது ரூ. 7000 ஆகும். கட்டிப்பிடிப்பதற்கு இவ்வளவு கட்டணமா என ஆச்சர்யப்படுபவர்களிடம், 'இந்தக் கட்டிப்புடி சிகிச்சை மூலம் பல வகையில் மக்களின் மன வாழ்வு மேம்படுத்துவதாக'க் கூறுகிறார் ட்ரெவர்.

மக்களின் தயக்கம்
முதலில் மக்களுக்கு, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் தன்னைக் கட்டிப்பிடிப்பதில் உடன்பாடு இருக்காது, கூச்சப்படுவார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், 'எந்த வேலையும் செய்யாமல், ஒருவரால் அன்பு காட்டப்பட, அக்கறை காட்டப்பட, அரவணைக்கப்பட நமக்கு ஒரு மணி நேரம் இருக்கிறதா? அது நம்மை எவ்வாறு உணரவைக்கும்?' என்பதை என்னைச் சந்திக்கும்முன் தங்களுக்குத் தாங்களே அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்' என்கிறார் ட்ரவர்.

தவறான புரிதல்
மனித தொடர்புகள் பற்றிய நீண்ட ஆராய்ச்சிப் பின்னர், அரவணைப்பதில் நிபுணத்துவம் பெற்றதாலேயே இதனை தனக்கு வருமானம் தரும் பணியாக மாற்றிக் கொண்டதாகக் கூறும் ட்ரவர், 'இந்த அரவணைப்பு தெரபி பற்றி இன்னமும் மக்களிடம் விழிப்புணர்வு தேவை, பலர் இதனை பாலியல் தொழில் என தவறாகப் புரிந்து கொள்கின்றனர்' எனக் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications