வென்றது நீதி.. ராகுல் ஒரு தண்டனை குற்றவாளி! காங்கிரஸ், திமுக கோர்ட்டை குறை கூறுமா? பாஜக கேள்வி
சூரத்: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் சூரத் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் சிக்கலில் மாட்டி கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ஒரு குற்றவாளி. நீதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறிய நாராயணன் திருப்பதி காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது வைர வியாபாரி நீரவ் மோடி, ஐபிஎல் மோசடியில் சிக்கிய லலித் மோடி ஆகியோரை விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

அதாவது ராகுல் காந்தி, ‛‛திருடர்கள் பெயர்கள் ஏன் மோடி என்று முடிகிறது?'' என கேள்வி எழுப்பினார். இதுதான் விவாதத்தை கிளப்பியது. ராகுல் காந்தி வேண்டும் என்ற மோடி சமுதாய மக்களை இழிவுப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை வழங்கியது.மேல்முறையீடு செய்ய வசதியாக அவருக்கு ஜாமீனும் நீதிமன்றம் வழங்கியது.
இதையடுத்து ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது அவரது எம்பி பதவி பறிபோனது. இந்நிலையில் தான் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று விசாரணை நடத்திய நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் காந்தி உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி தமிழ்நாடு பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: நீதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், திமுகவினர் அனைவரும் மீண்டும் இந்த நீதிமன்றத்தை குறை சொல்வார்களா?. ராகுல் காந்தி குற்றவாளி.. குற்றவாளி.. என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
ராகுல் காந்தி ஒரு தண்டனை குற்றவாளி. குற்றம்செய்தவர் என்பதை நீதிமன்றம் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இருப்பினும் அவர்கள் சர்வாதிகாரம் எனக்கூறி நீதித்துறையை மிகவும் மோசமாக அவமானப்படுத்தி அவதூறு செய்து வருகின்றனர். அதனால் ராகுல் காந்தி தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அதுதான் இந்த நாட்டில் ஜாதி சார்ந்து மிகவும் தரம்தாழ்ந்து விமர்சிக்க கூடிய நபருக்கு கிடைக்கும் தண்டனையாக இருக்கும்'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications