வைரல்..! கோவாவில் ராகுல் காந்தியின் பைக் பயணம்.. தேர்தலுக்கு போட்டுள்ள சூப்பர் பிளான்.. பலன் தருமா?
கோவா: அடுத்தாண்டு கோவாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி கோவா சென்றுள்ளார். கோவாவில் உள்ள பாரம்பரிய மோட்டார் பைக் டாக்சியால் பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
இந்தியாவின் முக்கிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதைக் குறிவைத்து அனைத்து கட்சிகளும் தங்கள் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டன.
கோவாவில் தற்பது பாஜக ஆட்சி உள்ள போதிலும் அடுத்த ஆண்டு தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா தேர்தல்
மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் கடந்த 2017இல் காங்கிரஸ் 17 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அக்கட்சியால் பெற முடியவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்ற போதிலும், இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதே தவற்றை மீண்டும் செய்துவிடக் கூடாது என்பதில் அக்கட்சி தெளிவாக உள்ளது. இதனால் அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி பேச்சு
இந்தச் சூழலில் கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாகக் கோவா சென்றுள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி. எரிபொருள் விலை உயர்வைக் கடுமையாகக் கண்டித்தார். கோவாவில் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கச்சா எண்ணெய்யின் விலை மிக அதிகமாக இருந்தது. ஒரு பேரல் 140 டாலர் வரை கூட சென்றது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைவாக உள்ளது. இருந்த போதிலும் எரிபொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

வெறும் 4-5 தொழிலதிபர்கள்
உலகிலேயே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியாவே உள்ளது. இதனில் மூலம் வெறும் 4-5 தொழிலதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர். இது அனைவருக்கும் தெரியும். சத்தீஸ்கர் தேர்தலில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தோம். பஞ்சாப், கர்நாடகாவில் அதேபோல சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். எங்களின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வாய் வார்த்தை அல்ல. அவை உத்தரவாதம்" என்றார்.

பைக் டாக்ஸி
ராகுல் காந்தி, கோவாவில் உள்ள பாரம்பரிய மோட்டார் பைக் டாக்சியான 'பைலட்' பில்லியனில் பயணம் செய்தார்.. கோவா தலைநகரில் உள்ள தியாகிகள் நினைவுச் சின்னமான ஆசாத் மைதானத்திற்கு இந்த மோட்டார் பைக் டாக்சியிலேயே அவர் வந்தார். இது தொடர்பான வீடியோவை கோவா காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஹெல்மெட் அணிந்தவாறு காங்.-இன் ராகுல் காந்தி பின் சீட்டில் அமர்ந்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை
கடந்த சில வாரங்களாகவே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்து முறையே 108.64 ரூபாயாகவும் 97.37 ரூபாயாகவும் உள்ளது. அதேபோல சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 105.74க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 101.92க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications