தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு அப்புறம்தான் ராகுலுக்குத் தலைவர் பதவி.. காங். முடிவு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு ராகுல் காந்தியை உயர்த்தும் திட்டத்தில் கட்சித் தலைமை இல்லையாம். இது சற்று கால தாமதமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன் முடிவுகளைப் பொறுத்துத்தான் ராகுல் காந்தியை தலைவராக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
எனவே தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல் களமானது, ராகுல் காந்தியின் செல்வாக்கு உரசிப் பார்க்கும் உரைகல்லாக அமையப் போகிறது.

கனவு
ராகுல் காந்தியைத் தலைவராக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் அதில் அவசரம் காட்ட யோசிக்கிறது கட்சித் தலைமை. காரணம், அவர் இன்னும் முழு அளவில் பக்குவப்படவில்லை என்று ஒரு தரப்பு யோசிப்பதால்.

துணைத் தலைவர்
இருப்பினும் தற்போது கட்சியில் உள்ள ராகுல் ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் வகையிலும், கட்சி முற்றிலும் கரைந்து போய் விடாமல் காக்கும் வகையிலும் துணைத் தலைவராக்கி வைத்துள்ளனர்.

லேட்டாகும் பாஸ்
இருப்பினும் அவர் தலைவர் பதவிக்கு வருவதற்கு சற்று காலதாமதமாகும் என்று தெரிகிறது. அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் முடிவைப் பொறுத்து இதுகுறித்து முடிவெடுக்க கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதாம்.

சட்டசபைத் தேர்தல் வரை வெயிட்
தமிழகம் உள்ளிட்ட 6 மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாத வாக்கில் நடைபெறவுள்ளது. எனவே அதுவரை ராகுல் காந்தி தலைவர் பதவிக்கு வருவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவசரப்பட வேண்டாமே
ராகுலை அவசரப்பட்டு தலைவராக்க கட்சி்த் தலைமை யோசிப்பதற்குக் காரணம், சட்டசபைத் தேர்தல் முடிவுகளால் ராகுல் காந்தியின் செல்வாக்கு மேலும் "பணால்" ஆகி அவருக்கு கெட்ட பெயரைத் தேடித் தந்து விடுமே என்ற பயத்தில்தானாம். எனவே தான் தேர்தலை முடித்து விட்டு அவரைத் தலைவராக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

படு கேவலமான தோல்வி
கடந்த வருடமே ராகுல் காந்தி தலைவராகியிருக்க வேண்டும். ஆனால் அவரது நேரமோ என்னவோ லோக்சபா தேர்தலில் படு கேவலமாக மண்ணைக் கவ்வியது காங்கிரஸ். வெறும் 44 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. எனவே தலைவராக்குதை தள்ளி வைத்து விட்டனர்.

18 வருடத்தை முடிக்கும் சோனியா
இந்த வருடக் கடைசியுடன் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்து சோனியா காந்தி 18 வருடத்தைப் பூர்த்தி செய்யவுள்ளார். எனவே இனிமேலும் தலைவர் பதவியில் தொடருவதில் சோனியாவும் ஆர்வமாக இல்லை என்று கூறப்படுகிறது.

இப்ப கொஞ்சம் தேவலாம்
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் திடீரென விடுப்பில் போவதாக கூறி விட்டு காணாமல் போன ராகுல் காந்தி திரும்பி வந்த பிறகு சற்று ஆக்டிவாக அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்திலும் கூட அவர் ஆவேசமாக பேசி பாஜக தரப்பை திணறடித்தார்.

பார்க்கலாம் பார்க்கலாம்
எனவே இப்போது தலைவர் பதவிக்கு அவரை அமர்த்த உயர் மட்டத் தலைவர்கள் விரும்பினாலும் கூட ராகுல் காந்திக்கும் கூட சற்று கால அவகாசம் எடுக்க விரும்புகிறாராம். கட்சித் தலைமையும் கூட சட்டசபைத் தேர்தல் வரை காத்திருக்க விரும்புவதால் அடுத்த ஆண்டுதான் ராகுல் காந்தி தலைவர் ஆவார் என்பது உறுதியாகியுள்ளது.

தேறுவது கஷ்டம்தான்
அடுத்து ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பாதி மாநிலங்களில் அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகியவற்றில் சொல்லிக் கொள்ளும்படியான பலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா, அஸ்ஸாமை மட்டுமே அது நம்பலாம். மற்றவற்றில் சான்ஸ் மிக மிக குறைவாகும் என்பது முக்கியமானது.

சோனியாவே நீடிக்கலாம்
எனவே ஒரு வேளை மகா கேவலமாக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டால் சோனியா காந்தியே மீண்டும்
தலைவர் பதவியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications