புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லாத 'புது ரகமான' பட்ஜெட் இது!!
டெல்லி: நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக புதிய ரயில்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறாத "புரட்சிகரமான" பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட்டைப் பொறுத்தவரையில் கட்டண உயர்வு இருக்குமா? நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்புதான் அதிகம் இருக்கும்.
அடுத்ததாக நீண்டகாலமாக தேங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கிறதா? எந்தெந்த மாநிலங்களுக்கு அதிக ரயில்கள் விடப்பட்டுள்ளன? என்பது போன்ற அம்சங்கள் கவனிக்கப்படும்.

மேலும் பிரதமர், ரயில்வே அமைச்சர் மற்றும் பிரதான கூட்டணி கட்சிகளின் சொந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய ரயில்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இதில் புறக்கணிக்கப்படுகிற மாநிலங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதும் வாடிக்கை.
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை என்ற ஒரே ஒரு அம்சம்தான் பொதுவான எதிர்பார்ப்புக்கு பதிலாக அமைந்துள்ளது. இன்றைய பட்ஜெட்டில் மேகலாயா- டெல்லி இடையே நேரடி ரயில் சேவை இயக்கப்படும் என்ற ஒற்றை அறிவிப்புதான் இடம்பெற்றுள்ளது.
மேலும் மும்பை- அகமதாபாத் இடையேயான புல்லட் ரயிலை விரைவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறார். இதைத் தவிர புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு இருக்காது என்றும் 'அறிவிக்கப்பட்டுள்ளது'.
மேலும் புதிய ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலித்து பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு.
இது மிகுந்த ஏமாற்றத்தை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இருக்கிற ரயில்வே துறையை மேம்படுத்துவதிலும் வசதிகளை அதிகரிப்பதிலும் நவீனப்படுத்துவதிலும் மட்டுமே அக்கறை கொண்ட பட்ஜெட்டாகத்தான் மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் இருக்கிறதே தவிர நாடு விடுதலை அடைந்து இன்னமும் தங்களது பகுதிகளுக்கும் ரயில் சேவை கிடைக்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் குரலை பற்றிய கவலைப்படாத பட்ஜெட்டோ இது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவதற்குள் புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருப்பது மட்டும் சற்றே ஆறுதலை ஏற்படுத்தக் கூடியதுதான்...
ரயிலுக்கு மட்டுமல்ல புதிய ரயில்கள் கிடைக்குமா என்பதற்கும் காத்திருக்கத்தான் வேண்டும்!!












Click it and Unblock the Notifications