கெலாட் VS வசுந்தரா.. ராஜஸ்தான் முதல்வராக யார் வேண்டும்? மக்கள் சாய்ஸ் இவர் தான்! பைலட்டுக்கு ஷாக்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் தான் முதல்வராக யார் வேண்டும் என்ற கேள்வியின் அடிப்படையில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மக்கள் சொன்ன பதிலால் சச்சின் பைலட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2018 முதல் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக சச்சின் பைலட் உள்ளார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே சமீபத்தில் முதல்வர் பதவி தொடர்பாக பிரச்சனை வெடித்தது. அதன்பிறகு கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது. இத்தகைய சூழலில் தான் வரும் நவம்பர் மாதம் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையே தான் Ground Zero Research எனும் அமைப்பு சார்பில் நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கருத்து கணிப்பு என்பது அக்டோபர் மாதம் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 4ம் தேதி வரை ஒரு மாதம் நடந்தது. மொத்தம் 100 தொகுதிகளை சேர்ந்த அனைத்து சாதி, மதங்களை சேர்ந்தவர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பில் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கு எந்த தலைவர் சரியாக இருப்பார்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கு தான் மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்ததாக 2வது இடத்தில் பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரரா ராஜே சிந்தியா, 3வதாக காங்கிரஸ் மாநில தலைவர் சச்சின் பைலட்டுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதன்படி தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் தான் முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர் என 33.68 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரரா ராஜே சிந்தியா என 28.71 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் என 18.18 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர பாஜகவில் இருந்து யாராவது ஒருவர் வர வேண்டும் என 8.54 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து யாராவது ஒருவர் வர வேண்டும் என 6.45 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 4.44 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக அறியப்படுபவர் சச்சின் பைலட். இவர் ஏற்கனவே முதல்வர் பதவியை எதிர்பார்த்து முட்டிப்மோதி பார்த்தார். ஆனால் முதல்வர் பதவி கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் முதல்வர் பதவிக்கு மக்களின் சாய்ஸ் என்பது அசோக் கெலாட்டுக்கு அதிகம் உள்ளது என்பதால் இந்த கருத்து கணிப்பு என்பது சச்சின் பைலட் தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications