மாநகராட்சி ஆஃபிசில் பசுவின் சிறுநீர் தெளிப்பு! கவுன்சிலர்களையும் விடாத பாஜக எம்எல்ஏ! நடந்ததை பாருங்க
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை நல்லவர்களாக மாற்றுவதாக கூறி பாஜக எம்எல்ஏ பசுவின் சிறுநீரை கங்கை நீருடன் சேர்த்து தெளித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா உள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியின் ஹெரிடேஜ் மேயராக பாஜகவின் முனிஷ் குர்ஜார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் தான் முனிஷ் குர்ஜார் மீது ஊழல் புகார்கள் எழுந்தன. இதையடுத்து முனிஷ் குர்ஜாவை மேயர் பதவியில் இருந்து பாஜக நீக்கம் செய்தது. மேலும் புதிய மேயராக பாஜகவின் குசும் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
குசும் யாதவ் தற்போது புதிய மேயராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு பாஜக கவுன்சிலர்கள் உள்பட 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர்கள் என 8 பேர் ஆதரவு தெரிவித்தனர். குசும் யாதவ் கடந்த 25ம் தேதி மேயராக பொறுப்பேற்ற நிலையில் அதற்கு முன்பாக அவர்கள் 8 பேரும் பாஜகவில் இணைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பாஜக எம்எல்ஏ ஒருவர் அவர்கள் மீது கங்கை புனித நீருடன் கலக்கப்பட்ட பசுவின் சிறுநீரை கலந்து தெளித்து தூய்மைப்படுத்தினார். ஜெய்ப்பூரின் ஹவா மஹால் சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக பாலமுகுந்த் ஆச்சாரியா உள்ளார். இவர் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த 7 கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ என 8 பேர் மீது கங்கை நீர் + பசுவின் சிறுநீரை மிக்ஸ் செய்து தெளித்தார்.

இவர்களை ஜெய்ப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்த பாஜக எம்எல்ஏ பாலமுகுந்த் ஆச்சாரியா அவர்கள் மீது கங்கை நீர் மற்றும் பசுவின் சிறுநீர் கலந்த திரவத்தை தெளித்தார். அதோடு ஜெய்ப்பூர் அலுவலகத்தில் ஊழல் நடந்துள்ளது. அதில் இருந்து அலுவலகத்தை சுத்தம் செய்வதாக கூறி அவர் ஜெய்ப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலும் பசுவின் சிறுநீரை தெளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இதுபற்றி பாஜக எம்எல்ஏ பாலமுகுந்த் ஆச்சாரியா கூறுகையில், ‛‛நாங்கள் கங்கா நீரால் அனைத்து அசுத்தங்களையும் அகற்றிவிட்டோம். வேதமந்திர பிரார்த்தனைக்கு பிறகு நவமி தேதியில் புதிய மேயர் பொறுப்பேற்றுள்ளார். இனி ஜெய்ப்பூர் மாநகராட்சியில் தூய்மையான சூழல் இருக்கும்'' என்றார்.












Click it and Unblock the Notifications